டில்லி

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் 

பீகாரை ஆட்சி செய்த மெகா கூட்டணியை விட்டு விலகி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்,பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். இந்த புதிய கூட்டணி அரசு அமைந்த நிலையில் அவர் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

இன்று பிரதமர் நேரம் ஒதுக்கியதையடுத்து, டில்லியில் பிரதமர் மோடியை, நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். பாஜகவுடன் புதிய கூட்டணி அரசு அமைந்தபின் இருவரும் முதல் முறையாகச் சந்தித்துப் பேசி உள்ளனர்.

வரும் 12 ஆம் தேதி நிதிஷ்குமார் தலைமையிலான புதிய அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ள நிலையில், பிரதமருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நேற்று முன்தினம் பாஜகவைச் சேர்ந்த பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் பிரதமரை சந்தித்தனர்.

பீகாரில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 27 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

நிதிஷ்குமார் பிரதமர் மோடி தவிர, பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலரையும் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது பாஜக தலைவர்களுடன் பீகாஎ மாநிலங்களவை தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.