டில்லி
இந்தியாவுக்குச் சீனாவில் இருந்து 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மிகப் பெரிய விநியோகமாக டில்லி அனுப்பட்டுள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 2.81 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று வரை 2.49 கோடிக்கும் மேல் பாதிக்கப்பட்டு அதில் 2.74 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று வரை 2.12 கோடி பேர் குணம் அடைந்து 35.12 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பலர் உயிர் இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதையொட்டி நாடெங்கும் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநிலங்களில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மத்திய அரசு பெற்று அந்தந்த மாநிலங்களில் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கிறது.
மேலும் மத்திய அரசு ஆக்சிஜன் தட்டுப்பாட்டைக் குறைக்க வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்ய உத்தரவு இட்டுள்ளது. இதில் மிகப் பெரிய அளவிலான விநியோகமாக 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஒரே டெலிவரியாக சீனாவின் ஹாங்சோவ் விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு வந்துள்ளது. மேலும் பல உபகரணங்கள் சீனாவில் இருந்து வர உள்ளன