சென்னை:
சென்னையில் சமீபக நாட்களாக  அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள் தடுக்க காவல்துறை  மீண்டும் அறிமுகப்படுத்த  உள்ள சைக்கிள் ரோந்து பலனளிக்காது என்று காவல்துறையினரே ஆதங்கப்படுகிறார்கள்.
கடந்த சில நாட்களாக சென்னையில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆலோசனையின் பேரில், இரவு நேரத்தில் கவலர்கள் சைக்கிளில் ரோந்து செல்ல ஏற்பாடு ஆகியுள்ளது. இதற்காக   ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தலா 2 சைக்கிள்கள் வீதம் 250 சைக்கிள்கள்  அளிக்கப்பட இருக்கின்றன.
patrol_cycle_2901567f
காவல்துறை உயர் அதிகாரிகள், “கார், ஜீப்,  போன்றவற்றில் போலீசார் இரவு ரோந்து செல்லும்போது காவல் துறை வாகனம் என்பதை அறிந்துகொள்ள ஒளிரும் லேசர் விளக்கும், சைரன் ஒலியும் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், குற்றவாளிகளுக்கு பய உணர்வையும் கொடுப்பது உண்மைதான். ஆனால் காவல் துறை வாகனம் வருவதை தொலைவிலேயே அறிந்துகொள்ளும் திருடன், அது அருகே வருவதற்குள் பாதுகாப்பாக மறைந்துகொள்கிறான். அது கடந்து சென்றதும் மீண்டும் தனது குற்றச் செயலை பயமில்லாமல் தொடர்கிறான்.  சைக்கிளில் செல்லும்போது குற்றவாளிகள் சிக்குவதற்கு 99 சதவீதம் வரை வாய்ப்பிருக்கிறது.
சைக்கிளில் ரோந்து செல்லும்போது அருகே உள்ள வீடுகளில் இருந்து வரும் சத்தங்களை தெளிவாக கேட்க முடியும். வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பவர்களையும், நிழல் அசைவுகளையும் கவனமாக பார்க்க முடியும். மறைவாக நின்று பேசுபவர்களை கூட கவனிக்க முடியும். மொத்தத்தில் குற்றவாளிகள் அனைவரும் எளிதாக காவலரின்  கண்களில் சிக்குவார்கள். சைக்கிளில் வரும் போலீஸை அருகே வரும் வரை திருடனால் கண்டுபிடிக்க முடியாது” என்று  தெரிவிக்கிறார்கள்.

டி.கே.ராஜேந்திரன்
டி.கே.ராஜேந்திரன்

ஆனால், கீழ்மட்ட காவலர்கள் “இந்த சைக்கில் ரோந்து எந்தவித பலனும் தராது” என்கிறார்கள்.
இவர்கள், “அந்தக் காலத்தில் சைக்கிள் ரோந்து பலனுள்ளதாக இருந்தது உண்மைதான்.  ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. குற்றவாளிகள் நவீன மோட்டார் வாகனங்கள் வைத்திருக்கிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க சைக்கிள் உதவுமா?
காவல்துறையை நவீனமாக மாற்றுவதே குற்றச் செயல்களை தடுக்க உதவும். பொது இடங்களில் இன்னும் அதிகமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது, சைபர் க்ரைம்களை தடுக்கும் நவீன வசதிகள், அவற்றை கையாள காவலர்களுக்கு பயிற்றி  என்று நவீன காலத்துக்கு காவல்துறை மாற வேண்டும்.
மேலும்,   ஆள் பற்றாக்குறையை போக்க வேண்டும்.  சென்னை காவல் நிலையங்களுக்கு  வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இன்னோவா ரோந்து வாகனங்களை ஓட்டுவதற்கு போதிய காவலர்கள் இல்லை.  இதனால் பெரும்பாலான காவல் வாகனங்கள்  பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இதைச் செய்வதை விட்டுவிட்டு, சைக்கிள் ரோந்து என்கிறார்கள். இது பலனளிக்காது”  ” என்று ஆதங்கப்படுகிறார்கள்.
இவர்களின் ஆதங்க குரலுக்கு சென்னை போலீஸ் கமிஷனர்  டி.கே.ராஜேந்திரன் காது கொடுப்பாரா?