சென்னை:
சென்னை ராயபேட்டையில் பூட்டிய வீட்டுக்குள் நிர்வாண நிலையில் நான்கு பெண்கள் பிணம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி இருக்கிறது.
சென்னை ராயபேட்டை முத்து தெருவில் வசிப்பவர் சின்னராசு (46).  காரைக்குடியை சேர்ந்த இவர், பட்டினப்பக்கத்தில் ஸ்வீட் ஸ்டால்  நடத்துகிறார்.
இவருக்கு சந்தன வீனா (36) என்ற மனைவியும் பவித்ரா(18), பரிமளா(19), ஸ்நேகா(16) என்ற மகள்களும் உள்ளனர். இரண்டு மகள்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர்.  ஸ்னேகா 12ம் வகுப்பு படித்து வந்தார்.
சின்னராசு குடும்பம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராயபேட்டையில் வசித்து வருகிறார்கள்.  கடந்த வாரம் சொந்த ஊருக்கு சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பி உள்ளனர். மீண்டும் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று  அக்கம் பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார்கள்.
அதன் பிறகு திங்கட்கிழமை முதல் வீடு பூட்டியே கிடந்தது.   அதனால் அக்கம் பக்கத்தவர்கள் இவர்கள் ஊருக்கு சென்றிருக்கிறார்கள்  என்று நினைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கடைசியாக சின்னராசுவை மட்டும் அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
நேற்றிரவு சின்னராசு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது, இது பற்றி வீட்டு உரிமையாளர் ராஜா பகதூர்,  ராயபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

பிணங்கள் கிடந்த வீடு
பிணங்கள் கிடந்த வீடு

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் ஆளுக்கொரு மூலையில் சந்தனவீனா, பவித்ரா, பரிமளா, சினேகா ஆகியோர் பிணமாக கிடந்துள்ளனர்.
உடல்கள் அழுகிய நிலையில் நிர்வாணமாக போர்வை போர்த்திய நிலையில் கிடந்துள்ளன.  சின்னராசுவை காணவில்லை. நான்கு பேரும் மூன்று நாட்களுக்கு முன்னரே இறந்திருக்கலாம் என  காவல்துறையினர் தெரிவித்தனர்.
நால்வர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடும்பத் தலைவர்  சின்னராசு என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
நால்வர் மரணத்துக்கு அவர்தான் காரணமா, தற்கொலையா , கொலையா என்பது சின்னராசு பிடிபட்டால் தான் தெரியும் என்பதால் சின்னராசுவை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.