விஜய்ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து ஓராண்டுக்கு முன் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திரபாய் படேல் பாஜக-வை மாபெரும் வெற்றிக்கு இட்டு சென்றுள்ளதோடு மூன்று முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு கூட கிடைக்காத சாதனை வெற்றியை பெற்றிருக்கிறார்.

பூபேந்திரபாய் படேல்

1985 ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 55.5 சதவீத வாக்குகளுடன் 149 இடங்களில் வெற்றிபெற்றதே இதுவரை சாதனை வெற்றியாக இருந்து வந்தது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து முதல்வராகவும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்த மாதவ்சிங் சோலங்கிக்கு எதிராக உட்கட்சி பூசல் அதிகரித்ததைத் தொடர்ந்து 1990க்குள் இருமுறை முதல்வர்கள் மாற்றப்பட்டனர்.

மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக நிலையான ஆட்சியை தரமுடியாமல் போன காங்கிரஸ் கட்சி பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பெரிதாக சாதிக்க முடியாமல் திணறியது.

மாதவ்சிங் சோலங்கி

37 ஆண்டுகள் கழித்து இந்த சாதனையை பாஜக தற்போது முறியடித்துள்ளது. 157 இடங்களை வென்றிருக்கும் பூபேந்திரபாய் படேல் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் உட்கட்சி பூசலையும் மீறி வெற்றிபெற்றிருக்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநிலத்தில் தனது செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்த மோடி குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு முதல் நாள் தனது தாயிடம் ஆசிவாங்கி வெளியிட்ட புகைப்படம் இவர் மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்புகிறார் என்ற தோற்றத்தை அவரது ஆதரவாளர்கள் இடையே ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக 2017 ம் ஆண்டு போட்டியிட்டு வென்ற பூபேந்திரபாய் படேல், மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வந்ததை அடுத்து கடந்த ஆண்டு முதல்வராக நியமிக்கப்பட்டார்.

முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற ஒருவர் அமைச்சராக கூட பதவி வகிக்காமல் நேரடியாக முதல்வரானது அதிர்ஷ்டத்தின் உச்சம் என்று மோடி ஆதரவாளர்களால் அப்போது வர்ணிக்கப்பட்டது.

பூபேந்திரபாய் படேல் இரண்டாவது முறையாக வரும் 12 ம் தேதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் இருந்து யோகி ஆதித்யநாத் அசாம்-மில் இருந்து ஹேமந்த பிஸ்வ குமார் உள்ளிட்ட சிலர் நீங்கலாக பெரும்பாலான பாஜக மாநில முதல்வர்கள் மோடிக்கு கட்டுப்பட்டவர்களாக உள்ள நிலையில் இவர்கள் இருவரும் மோடிக்கு போட்டியாக கிளம்பியுள்ளதால் தேசிய அரசியலிலும் மோடிக்கு நெருக்கடி உருவாகி வருகிறது.

அதேவேளையில், மோடி மற்றும் அமித் ஷா இருவருக்கும் கட்டுப்பட்டவரும் பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி. நட்டாவின் சொந்த மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியை இழந்திருப்பது தேசிய அளவில் அக்கட்சியில் பல்வேறு மாறுதல்களை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உட்கட்சி பூசல் மற்றும் மோடிக்கு நிகரான ஆளுமைகள் அந்த கட்சியிலேயே வளர்ந்து வரும் நிலையில் சொந்த மாநிலத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதிலேயே கவனமாக இருந்து வருகிறார் மோடி.

வரலாறு காணாத வெற்றி மோடிக்கு தேசிய அளவில் பலம் சேர்க்குமா அல்லது பலவீனப்படுத்துமா என்பது கடந்த கால குஜராத் அரசியல் வரலாறு உணர்த்தும் நிலையில் பாஜக மற்றும் மோடியின் செயல்பாடு எப்படி அமையும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இருந்தபோதும், 15 ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த டெல்லி மாநகராட்சியை இழந்துள்ள பாஜக, சட்டமன்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும் குறிப்பிடும்படியான வெற்றியை பெறவில்லை என்றாலும், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக தனது உதார்விடும் வேலையை மட்டும் மோடி ஆதரவு கோஷ்டி தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.