டில்லி

புலந்த்ஷகர் வன்முறைச் சம்பவ குற்றவாளிகளுக்கு மாலை மரியாதை அளித்ததற்குக் கலவரத்தில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி மனைவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷக்ர் பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பசுக்கள் கொல்லப்பட்டதை அடுத்து கடும் கலவரம் நிகழ்ந்தது. இந்த கலவரத்தில் காவல்துறை ஆய்வாளர் சுபோத் சிங் கொல்லப்பட்டார். காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம் அடைந்தார். இந்த கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவர்கள் ஆறு பேரும் மாலை  மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

பிரபல செய்தித் தொலைக்காட்சியான என் டி டி வி இது குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வை நடத்தியது இந்த நிகழ்வில் முன்னாள் காவல்துறைத் தலைவர் விக்ரம்சிங், மறைந்த சுபோத் சிங் மனைவி உள்ளிட்ட சிலர் கலந்துக் கொண்டனர். ஜாமீனில் விடுதலை அடைந்து மாலை மரியாதை செய்யப்பட்டவரில்  ஒருவரான கோக்சி என்பவர் சுபோத் சிங்கை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். இந்த நிகழ்வில் சுபோத் சிங் மனைவி தனது குடும்பத்தினர் இந்த மாலை மரியாதை நிகழ்வால் மிகவும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறி உள்ளார்.

சுபோத் மனைவி, “எந்த ஒரு அடிப்படையில் இந்த கலவரக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. இந்த முடிவால் நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். மேலும் இவர்களுக்கு மாலை மரியாதை  செய்யப்பட்டது எங்கள் கோபத்தை அதிகரித்துள்ளது, இவர்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். ஆனால் மாலை மரியாதை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். அவர் உருக்கத்துடன் பேசியது முன்னாள் காவல்துறைத் தலைவர் விக்ரம் சிங் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

உ பி மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, “இந்த மாலை மரியாதை நிகழ்வை ஆளும் பாஜக அரசு நிகழ்த்தவில்லை. அதற்கும் எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வரவேற்பு அளிக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் இத்தகைய வரவேற்பை அளித்துள்ளனர். இதற்கு உத்திரப் பிரதேச அரசு மற்றும் பாஜக எவ்விதம் பொறுப்பு ஏற்கமுடியும்? இதைப் போன்ற கருத்தை எதிர்க்கட்சிகள் ஊக்குவிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.