ஈரோடு: பவானி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தோடுவதால், ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை  விடுத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், மேட்டுப்பாளையம்  அடிவாரப் பகுதியில் உள்ள 100 அடி உயரம்கொண்ட பில்லூர் அணை ஏறக்குறைய நிரம்பியுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 97 ஆக உள்ளது.  தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து வந்துகொண்டிருப்பதால், பாதுகாப்பு கருதி அணை திறக்கப்பட்டு உள்ளது. அணையின் 4 மதகுகளிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதன் காரணமாக பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிராமப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பவானி ஆறு கரையோரப் பகுதிகளான  தேக்கம்பட்டி, நெல்லிதுறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை ஆகியபகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் மற்றும்  அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்க வைப்பதற்காக   மேட்டுப்பாளையத்தில் 7 திருமண மண்டபங்களும், 2 பள்ளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.