சென்னை: ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’, பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா திறப்பு மற்றும் நவி மும்பை தமிழ்சங்க கட்டிடம் உள்பட பல்வேறு நிகழ்வுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த ஆய்வாளர்களுக்கு ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் விருது தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். அதன்படி, மூத்த ஆய்வாளரான திரு. சீனி விசுவநாதனுக்கும், பேராசிரியர் முனைவர் ய.மணிகண்டனுக்கும் மேலும், மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும் அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்களது குடும்பத்தாருக்கு, ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’ மற்றும் விருதுத்தொகை தலா ரூ. 3 இலட்சத்திற்கான காசோலைகள் ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை, பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சதுப்புநில சூழலியல் பூங்காவை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், நவிமும்பை தமிழ்ச் சங்கத்திற்கு கட்டடம் கட்ட தமிழ்நாடு அரசின் நிதியுதவியாக ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையை நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின் இன்று (10.12.2021) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை, பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சதுப்புநில சூழலியல் பூங்காவைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
சதுப்பு நிலம் என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு குறு தாவரங்களும், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் வசிக்கக்கூடிய பகுதியாகும். இச்சதுப்பு நிலம் வெள்ளத்தைத் தணித்தல், நிலத்தடி நீர் சேமிப்பை மேம்படுத்துதல், கரிபொருள் வரிசைப்படுத்துதலுக்கு உதவுதல், உயரிய பல்லுயிர்களை ஆதரித்தல், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்கு உதவுகிறது.
தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் 700 ஹெக்டர் பரப்பளவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி சென்னை மாநகரின் இடையே இயற்கை அழகுடன் காணப்படுகிறது. சென்னை மாநகரத்தில் பெருமழைக் காலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வெள்ளநீர் வடிகால் பகுதியாக இருந்து வருகிறது. இச்சதுப்புநிலம் சுமார் 231 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நீரை ஒக்கியமடுவு மற்றும் கோவளம் ஆகிய இரண்டு நீர் வெளியேற்றும் கால்வாய் மூலம் வங்காள விரிகுடாவில் கலக்க உதவுகிறது.
இச்சதுப்பு நிலப் பகுதியில் 176 வகையான பறவையினங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தையினங்கள், 5 வகையான ஒட்டுமீன் இனங்கள் மற்றும் 14 வகையான வண்ணத்துப் பூச்சிகள் ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாகவும், ஒட்டுமொத்தமாக 459 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.
2019-20ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 2,65,313 பறவைகள் இச்சதுப்பு நிலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடமேற்குப் பகுதியில் பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா அமைத்திட தமிழக அரசால் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இச்சதுப்பு நிலத்தினைப் பாதுகாத்திட சுமார் 1,700 மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டதுடன், பொதுமக்கள் பார்வைக்காகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதின் நோக்கத்திற்காகவும் பசுமையான பொது இடம் (PUBLIC GREEN SPACE) அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், பார்வையாளர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை, சதுப்பு நிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் விவரம், மீன் இனங்கள் பட்டாம்பூச்சி வகை, பறவையினங்கள், பல்லுயிர்ப் பரவல் மற்றும் அதன் வளம் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் கருத்தியல் அடையாளங்கள் மற்றும் மாதிரிகள், சூழலியல் பூங்காவில் அழகியலை மேம்படுத்த வேங்கை, அரசு, செஞ்சந்தனம், சந்தனம், குமிழ், மகாகனி, வேம்பு, நீர்மருது இலுப்பை போன்ற மண்சார்ந்த 5,000 மரக்கன்றுகள் நடைப்பாதையின் இருபுறமும் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளத் தடுப்புப் பணிக்காக தற்போது சுமார் 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை “ராம்சார் சாசனத்தின்”படி ஈரநிலமாக அறிவிக்கை செய்ய மத்திய அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகை தரும் வெளிநாடு மற்றும் உள்ளூர் வலசை பறவையினங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையைக் கருத்தில் கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினைப் பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.