டெல்லி: பிஎஸ்-3 வாகனங்களை நாளை முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதன் மூலம் இந்திய வாகன உற்பத்தித் துறையை ஆட்டம் கண்டுள்ளது.

பிஎஸ் (பாரத் ஸ்டேஜ்) பற்றி நாம் அறிய வேண்டிய விஷயங்கள். இதோ…

பாரத் ஸ்டேஜ் அல்லது பிஎஸ் என்பது வாகனங்களுக்காக மத்திய சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த விதிமுறை. வாகன இஞ்ஜினில் இருந்து வெளியேறும் புகை, காற்று மாசை உண்டாக்கும் அளவை குறிக்கும் வகையில் பிஎஸ் அளவில் மாறுபாடு ஏற்படுகிறது. தற்போது பிஎஸ்- 3 என்ற அளவை மேலும் கடுமையாக்கி பிஎஸ் -4 என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பல வெளிநாடு ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது.

2000-ம் ஆண்டில் தான் இந்தியாவில் இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தது. அப்போதே ஐரோப்பிய நாடுகள் யூரோ 1, யூரோ 2 என்ற விதிமுறைகளை பின்பற்றி வந்தன. 2005ம் ஆண்டில் பிஎஸ்-2, 2010ம் ஆண்டில் பிஎஸ்-3 விதிமுறைக்கு இந்தியா மாறியது.

ஐரோப்பிய நாடுகள் தற்போது யூரோ 6 என்ற கோட்பாட்டை ஏற்கனவே கடைபிடிக்கத் தொடங்கி விட்டது. தற்போது இந்தியா மிகவும் பின்தங்கி தற்போதுதான் பிஎஸ்-3க்கு நிலையில் இருந்து முன்னேறுகிறது.

இந்த தாமதத்தைக் குறைக்கும் வகையில், பிஎஸ்-4ஐத் தொடர்ந்து பிஎஸ்-5ஐ கைவிட்டுவிட்டு பிஎஸ்-6ஐ 2020ல் பின்பற்ற இந்தியா முடிவு செய்துள்ளது. அதற்கு தகுந்தார்போல் வாகன உற்பத்தி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

2 ஸ்ட்ரோக் வாகனங்களைத் தொடர்ந்து தற்போது பிஎஸ்-3 வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வகை வாகனங்களின் விற்பனை மற்றும் வாகனப் பதிவுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையான வாகனங்களை ஓட்டுவதற்கு எவ்வித தடையும் இல்லை.

பிஎஸ்- 3ல் இஞ்ஜினை இயக்கும் போது வெளியாகும் புகையைக் எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்துவது அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது பிஎஸ்-4ல் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் போது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆவியாவது குறைக்கப்படும். எனவே, பிஎஸ்-4 விதிமுறையை பின்பற்றி வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், எரிபொருள் ஆவியாவதைக் கட்டுப்படுத்தும் யூனிட்டையும் வாகனத்தில் பொறுத்த வேண்டும்.

இந்த புதிய திட்டத்தால் சுற்றுச்சூழல் மாசடைவது கட்டுப்படுத்தப்படும். அதோடு வாகனங்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதனால் வாகனங்களின் விலை உயரும்.

சுசூகி, ஹூண்டாய், பஜாஜ் ஆகிய ஆட்டோமொபைல் உற்பத்திக் நிறுவனங்கள் ஏற்கனவே பிஎஸ்-4க்கு மாறிவிட்டன. மற்ற நிறுவனங்கள் தற்போது மாற்றத்துக்கான ஆரம்ப நிலையில் உள்ளன.