புதுடில்லி

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதியைப் போல் நடத்துவதாகப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குர்றம் சாட்டி உள்ளார்

கடந்த மாதம் 21 ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முதல்வர்மான பகவந்த் மான் திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார்.

அதன் பிறகு பகவந்த் மான் செய்தியாளர்களிடம்,

அரவிந்த் கெஜ்ரிவாலுக்குச் சிறையில் கடும் குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் வசதிகள்கூட கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது. அப்படி அவர் என்ன தவறு செய்தார்?  அவரை நாட்டின் மிகப்பெரிய பயங்கரவாதியைப் போல் நடத்துகிறார்கள். பிரதமர் மோசிக்கு என்ன வேண்டும்? 

கெஜ்ரிவால் வெளிப்படைத்தன்மை அரசியலைத் தொடங்கி பா.ஜ.க.,வின் அரசியலுக்கு முடிவு கட்டியதால் இப்படி நடத்தப்படுகிறார்.  நான் அவரிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, என்னை விடுங்கள், பஞ்சாப்பில் எல்லாம் நன்றாக உள்ளதா? என்று கேட்டார். 

ஏனெனில் நாங்கள் அரசியலைப் பணியாகச் செய்கிறோம். கெஜ்ரிவாலுடன் நாங்கள் நிற்கிறோம். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ஆம் தேதி, ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும்.” 

என்று கூறி உள்ளார்.