பெங்களூரு: பெங்களுரு மாநகரத்தில்,  பட்டப்பகலில் தனியார் இணையசேவை வழங்கும்நிறுவனத்துக்குள் புகுந்த ஒரு கும்பல், அங்கிருந்த முக்கிய அதிகாரிகள் 2 பேரை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த  சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் அம்ருத்ஹள்ளியுல்  என்ற பகுதியில் ஏரோனிக்ஸ் இன்டர் நெட் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு (2022) முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் அந்த பகுதியில்  இணைய சேவை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் பணீந்திரா மற்றும் வினு குமார். பணிந்திரா நிறுவனத்தின் சிஇஓவாகவும், வினுகுமார் இயக்குனராகவும் இருந்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்துக்கு நேற்று மாலை வந்த 3 நபர்கள், அங்கிருந்த பணீந்திரா, வினுகுமார் இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.  இதில் பணீந்திரா மற்றும் வினு குமார் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.  இந்த சம்பவத்தால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். சிலர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு  மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால்,  கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து, நிறுவனம் சார்பில் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த படுகொலை குறித்த வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில்,  கொலை செய்யப்பட்ட பணீந்திரா மற்றும் வினுகுமார் இருவரும்  ஏற்கனவே பெலிக்ஸ்ன் என்பவருடன் இணைந்து பெங்களூரு பன்னரகட்டாவில் உள்ள இணைய சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், பின்னர் அதிலிருந்து விலகி,  கடந்த ஆண்டு தனியாக நிறுவனத்தை  தொடங்கியதும் தெரிய வந்துள்ளது. அதனால் இந்த கொலைக்கு அதுதான் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கொலை செய்த 3 பேரில் 2 பேரின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் முன்னாள் ஊழியர் என்றும் தெரிகிறது. குற்றவாளியை தேடும் பணி நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் அலுவலகத்தில் புகுந்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.