புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கர்நாடகாவை சேர்ந்த வீரரின் மனைவி, தானும் ராணுவத்தில் சேர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

gurus

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம் தற்கொலைப்படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், பல தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் கர்நாடகா மாநிலம் மாண்டியாவை சேர்ந்த குரு என்ற வீரரும் மரணமடைந்தனர். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. குருவின் மரணத்தால் அவரது கிராமமே துயரத்தில் ஆழ்ந்திருந்தது.

தனது கணவர் உயிரிழப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலாவதி, தானும் ராணுவத்தில் சேர விரும்புவதாக தெரிவித்தார். ’ எனது கணவர் ராணுவத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை ஆற்ற விரும்பினார். ஆனால் அவரது ஆசை நிறைவேற வில்லை. அவரது கனவை நிறைவேற்றும் வகையில் நான் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் சேவை புரிய விரும்புகிறேன்.

எனது கணவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் தேசத்திற்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார்’ என்று கலாவதி கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.