ண்டிகர்

ஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொன்றவரின் மரண தண்டனை குறைக்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கடந்த 1995 ஆம்  வருடம் பல்வந்த் சிங் ரஜோனா என்பவரால் கொல்லப்பட்டார்   இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ரஜோனோவுக்கு தூக்கு தண்டனை விதித்தது.   அதைப் பஞ்சாப்  உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.   அவரது கூட்டாளியான ஜக்தர் சிங் ஹவாராவுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் மாதம் 31 ஆம் தேதி அன்று ரஜோனாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நிலையில் சிரோமணி குருவார பிரபந்தக் கமிட்டி ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்தது.   அதை ஒட்டி மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.  அதன் பிறகு இந்த கருணை மனு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.

தற்போது பியாந்த் சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படலாம் என அதிகாரபூர்வமற்ற செய்தி வெளியாகி உள்ளது.    இந்த செய்தி இன்னும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் உறுதிப்படுத்த முடியாத நிலையில் பஞ்சாப் மாநில அரசியலில் அது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

மறைந்த பியாந்த் சிங்கின் பேரனும் காங்கிரஸ் சட்டப்பேரவை  உறுப்பினருமான குரிகிரத் சிங் கோட்லி மத்திய அரசுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.   அவர் செய்தியாளர்களிடம், “மத்திய அரசு ரஜோனாவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தால்  அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.   நாங்கள் அந்தக் கொலையாளியை மன்னிக்கத் தயாராக இல்லை.

மத்திய அரசு ரஜோனாவின் தூக்கு தண்டனையைக் குறைக்க நினைப்பது துரதிருஷ்ட வசமானது.   மேலும் அரசியல் நோக்கம் கொண்டது.   மோடி அரசு அமைதியை விரும்பும் மக்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறதா அல்லது அதற்கு நேர் மாறானவர்களுக்கு துணை போக நினைக்கிறதா என்பதை தெளிவு படுத்த வேண்டும்” எனக் கூறி உள்ளார்.  இதே கருத்தை பியாந்த் சிங்கின் மற்ற உறவினர்களும் தெரிவித்துள்ளனர்.