உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடித் தந்த பென் ஸ்டோக்ஸ், அந்நாட்டின் சிறந்த ஆட்டக்காரராக பார்க்கப்பட்டாலும், இறுதி போட்டியில் அவரது தந்தை நியூசிலாந்து அணிக்கு ஆதரவு அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில், இக்கட்டான நேரத்தில் களத்தில் நின்று 84 ரன்களை விளாசிய இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், அந்நாட்டின் நட்சத்திர வீரராக பார்க்கப்படுகிறார். ஆனால் ஸ்டோக்ஸின் தந்தை இறுதி போட்டியின் போது நியூசிலாந்தை ஆதரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் 4, 1991ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டில் பிறந்த பென் ஸ்டோக்ஸ், தனது இளம் வயது காலத்தை கிரிஸ்ட் சர்ச்சில் தான் கடந்து வந்தார்.  தனது தந்தை ரக்பி அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர், தனது 12வது வயதில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார் ஸ்டோக்ஸ். ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தாலும், அவரின் பெற்றோர் கிரிஸ்ட் சர்ச்சிலேயே வசித்து வந்தனர்.

நியூசிலாந்து நாட்டின் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஸ்டோக்ஸின் தந்தை ஜெரர்ட், ”உலக கோப்பை இறுதி போட்டியில் நான் நியூசிலாந்து அணிக்கு ஆதரவாக தான் இருந்தேன். ஆனாலும் என் மகன் தனது சிறப்பான ஆட்டத்தை இப்போட்டியில் இங்கிலாந்துக்காக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் மனதுடைந்த நிலையிலேயே இருக்கிறேன்.

கோப்பையை வெல்லாமல் தொடரில் இருந்து வெளியேறுவது என்பது நமக்கு ஏற்படும் அவமானங்களில் ஒன்று. என் இதயங்களில் நியூசிலாந்து அணி இடம்பிடித்திருக்கிறது. பென் மற்றும் அவரது அணிக்காக சந்தோஷப்படுகிறேன். நான் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு ஆதரவாக தான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு, “பென் ஸ்டோக்ஸை மீண்டும் விளையாட அழைக்கும் நிலை இருக்காது என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், அவர் கடும் சோர்வுடன் தான் இருந்தார். ஆனாலும், அவரின் அதிரடி ஆட்டம் அவருக்கு உதவியிருக்கிறது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவன் என்கிற முறையில் இல்லாவிட்டாலும், சக தோழனாக அந்த அணி வீரர்களுக்காக பென் வருந்தியிருப்பார். இரு அணிகளும் நட்பு ரீதியிலான அணிகள். ஒருவரை ஒருவர் மதித்து, விட்டுக்கொடுக்கும் அணிகள்” என்றும் அவர் தெரிவித்தார்.