எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியாக பார்க்காமல் கவர்னர் மற்றும் ஓபிஎஸ் உடன் ஒரே மேஜையில் தோழமையுடன் உரையாடிய மு.க.ஸ்டாலின்…

Must read

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும், அங்கு நடைபெற்ற தேநீர் விருந்தில் அங்கிருந்த மேஜை ஒன்றில்  கவர்னர் பன்வாரிலால், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் தலைமைச்செயலாளர்  உடன் ஒரே மேஜையில் அமர்ந்து சகஜமாக உரையாடிக்கொண்டு தேநீர் அருந்தினார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. தமிழக அரசியல் களத்தில், ஸ்டாலின் புதிய அணுகுமுறை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக கருதாமல் தோழமையுடன் பேசி  பழகியது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்வில், ‘முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ என்று ஸ்டாலின் பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

மிக மிக எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர், அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அவருடன் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ,  சபாநாயகர் தனபால், நவநீத கிருஷ்ணன் எம்.பி. உள்பட சிலர் வந்திருந்தனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விழாவில் கலந்து கொள்ளாத நிலையில், பன்னீர் செல்வம் கலந்து கொண்டது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

ஜெயலலிதா இறந்த போது, முதல்வராக ஓ.பி.எஸ். பதவியேற்ற போது கூட, சட்டசபையில் திமுகவினரிடம் அவர் சிரித்த முகத்துடன் பேசியது , எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.ஸிடம் சட்டசபையில் பேசிய காட்சிகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினும், எந்தவித வித்தியாசமும் காட்டாமல்,  கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தின்போது, கவர்னர் மற்றும் ஓபிஎஸ், தனபால் ஆகியோர் உடன் ஒரே மேஜையில் அமர்ந்து உரையாடிக்கொண்டது வரவேற்பை  பெற்றுள்ளது. ஸ்டாலின் அணுகுமுறை தமிழக அரசியல் களத்தில் வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா இருக்கும் வரை, எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியாகவே நினைத்து பாரபட்சம் காட்டி வந்தார். அதையே எடப்பாடியும் கடைபிடித்து வந்தார். ஆனால், எதிர்க்கட்சி யினரை எதிரிக்கட்சியாக பார்க்காமல்,  நண்பர்களாக கருதி அவர்களிடம் உரையாடியது வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசியல் களத்தின் மாற்றத்திற்கான அறிகுறி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article