டில்லி

தொடர்ந்து இரண்டாம் மாதமாகக் குறைந்து வரும் நாட்டின் ஏற்றுமதி சென்ற மாதம் 6.57% குறைந்துள்ளது.

கடந்த 7 மாதங்களாகவே நாட்டின் வர்த்தகம் மிகுந்த பின்னடைவில் உள்ளது.   இதற்கு முக்கியக் காரணம் ஏற்றுமதி குறைந்து வருவதாகும் என ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.   இதனால் நாட்டில் உற்பத்திக் குறைவு அதிகரித்துள்ளது.   பொதுவாக உற்பத்திக் குறையும் போது பொருளாதார வளர்ச்சியும் குறையும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

கடந்த இரண்டு மாதங்களாகவே நாட்டின் ஏற்றுமதி மிகவும் பின்னோக்கிச் சென்றுக் கொண்டுள்ளது.   அதே வேளையில் இறக்குமதியும் சரிந்து  வருகிறது. தங்கத்தின் இறக்குமதி 62.49% அதாவது 13.6 லட்சம் டாலர் அளவுக்கு சரிந்துள்ளது.    கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இறக்குமதியை விட ஏற்றுமதி 1.5 லட்சம் கோடி டாலர் அதிகரித்திருந்தது.

நாட்டின் 30 முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் 22 பொருட்களின் ஏற்றுமதி சென்ற மாதம் பின்னடைந்துள்ளது.  இதில் மதிப்புமிகுந்த கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி 5.56%,  பெட்ரோலியப் பொருட்கள் 18.6% மற்றும் பொறியியல் பொருட்கள் 6.2% அளவுக்குக் குறைந்துள்ளன

சென்ற மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி 18.33% அதாவது 159.57 லட்சம் கோடியாகக்  குறைந்துள்ளது.  எண்ணெய் அல்லாத பொருட்களின் இறக்குமதி 12.3% அதாவது 27.91 லட்சம் கோடியாகி உள்ளது.  அத்துடன் இந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதம் முதலே குறைந்துக் கொண்டு வருகிறது.  கடந்த மாதம் இது உச்சநிலையை அடைந்துள்ளது.

லூதியானாவை சேர்ந்த ஏற்றுமதியாளர் எஸ் சி ரத்தன், “அரசு உடனடியாக தனது வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை சீரமைக்க வேண்டும்.   இது தாமதம் ஆக ஆக ஏற்றுமதியின் சரிவு கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் உண்டு.    இவ்வாறு ஏற்றுமதி குறைவது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கும்.  ஆகவே அரசின் உடனடி நடவடிக்கைகளைப் பொறுத்தே ஏற்றுமதி சரிவைக் குறைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.