இந்திய கிரிக்கெட் வீரர் விருதிமான் சாஹா பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக நேற்று குற்றம் சாட்டினார். இது குறித்து பி.சி.சி.ஐ. உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இலங்கைக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு விருதிமான் சாஹா-வுக்கு வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணி நிர்வாகிகள் தன்னை கிரிக்கெட் விளையாட்டில் இருந்தே ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி தெரிவித்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் சாஹா.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தன்னிடம் பேட்டி எடுக்க போனில் தொடர்பு கொண்ட பத்திரிகையாளரின் அழைப்பை ஏற்க மறுத்ததால் தன்னை மிரட்டும் விதமாக வாட்ஸப் தகவல் அனுப்பியதாக சாஹா நேற்று ட்விட்டரில் பதிவிட்டார்.

சாஹா-வுக்கு ஆதரவாக முதலில் வீரேந்திர சேவாக் குரல் கொடுத்தார், இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பலரும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “பி.சி.சி.ஐ. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும், வீரர்கள் இதுபோல் துன்புறுத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. சாஹா-வை மிரட்டிய பத்திரிகையாளர் யார் என்பது குறித்து ஜெய் ஷா உடனடியாக தலையிட்டு விசாரிக்க வேண்டும்” என்று பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் அந்த பத்திரிகையாளர் யார் என்று தெரிவிக்கும்படி சாஹா-விடம் கூறியதோடு பி.சி.சி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் குரலெழுப்பி உள்ளனர்.