இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்களுடனான தனது வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) இரவு வெளியிட்டது.

இதில் கடந்த ஆண்டு தனது திறமையை சீராக வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா-வின் சம்பளத்தை ரூ. 7 கோடியாக உயர்த்தி A+ பிரிவுக்கு மாற்றி அவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய வீரர்களுடன் தற்போது ரவீந்திர ஜடேஜா-வும் A+ பிரிவுக்கு உயர்ந்துள்ளார்.

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் A+, A, B மற்றும் C என நான்கு கிரேடுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். A+ பிரிவில் உள்ளவர்களுக்கு 7 கோடி ரூபாயும், A பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாயும், B பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 3 கோடி ரூபாயும் மற்றும் C பிரிவில் உள்ளவர்களுக்கு 1 கோடி ரூபாய் என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் வீரர்களின் தகுதி மற்றும் திறன் வெளிப்பாடு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பிரிவு மாற்றியமைக்கப்படும் 2022 – 23 நிதியாண்டு முடிவடைவதை அடுத்து அடுத்த ஆண்டுக்கான சம்பள பட்டியல் வெளியாகி உள்ளது.

இதில் :

கிரேடு A+ பிரிவு: ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா

கிரேடு A பிரிவு: ஹர்திக் பாண்டியா, ஆர் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த், அக்சர் படேல்

கிரேடு B பிரிவு: சேதேஷ்வர் புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், ஷுப்மான் கில்

கிரேடு C பிரிவு: உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.