மும்பை

சிவசேனா அளித்த புகாரையொட்டி டிக் டாக் தனது 3 பயனாளிகள் கணக்கை முடக்கி உள்ளது.

டிக் டாக் செயலியில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.  அதையொட்டி சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.   அதன் பிறகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பல லட்சக்கணக்கான வீடியோக்கள் அகற்றப்பட்டன.  அதன் பிறகு உயர்நீதிமன்றம் தனது உத்தரவைத் திரும்பப் பெற்றது.  தற்போதுள்ள நிலையில் முகநூலை விட அதிகம் பேர் டிக்டாக் செயலியில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்த டிக்டாக் செயலியில் டீம் 07 என்னும் பெயரில் ஒரு இளைஞர் குழு பல வீடியோக்களை பதிவிட்டு வந்தது.  ஐந்து பேர் கொண்ட இந்த குழுவில் முக்கிய உறுப்பினர்கள் ஹஸ்னைன் கான, ஷடன் ஃபரூக்கி, மற்றும் ஃபைசல் ஷேக் ஆகியோர் ஆவார்கள்.  மீதமுள்ளவர்களின்  பெயர்கள் அட்னான் ஷேக் மற்றும் ஃபைஸ் பாலோச் ஆகும்.  மும்பையை சேர்ந்த இவர்கள் பைக் சாகச வீடியோக்கள் மூலம் மிகவும்  புகழ் பெற்றனர்.  இவர்களுக்கு 4 கோடி ரசிகர்கள் உள்ளனர்.

இந்த குழு ஒவ்வொரு நாளும் 15 நொடி ஓடக்கூடிய வீடியோக்களை ஏராளமாகப் பதிந்து வந்தனர்.   அவற்றில் ஐபிஎல் போட்டிகள், சல்மான் கான் படம், ஈத் என அப்போதைய விவகாரங்கள் மட்டும் இருந்தன.    அவர்களுடைய எந்த வீடியோவும் தேர்தல்,  புல்வாமா, பாகிஸ்தான் உறவு, மோடி, ராகுல் காந்தி, என எதைக் குறித்தும் இருக்காது.   அனைத்து வீடியோக்களும் முழுக்க முழுக்க நகைச்சுவை உணர்வுடன்  உருவாக்கப்பட்டவை ஆகும்.

கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்சவான் மாவட்டத்தில் உள்ள சிற்றூரில் அன்சாரி என்னும் 24 வயது வாலிபர் திருட வந்ததாகக் கூறி தாக்கப்பட்டார். அப்போது அவர்  இஸ்லாமியர் என தெரிந்துக் கொண்ட அவரை அடித்த கும்பல் அவரை ஜெய்ஸ்ரீராம் எனவும் ஜெய் அனுமான் எனவும் கோஷமிடச் சொல்லி உள்ளனர்.  அவர் மறுத்ததால் அவரை அடித்து படுகாயப்படுத்தி உள்ளனர்.  அவர் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இதற்காக டீம் 07 வெளியிட்ட வீடியோவில், “இன்று நீங்கள் அன்சாரியைக் கொன்று விட்டீர்கள்.   நாளை அவருடைய குழந்தைகள் பழி தீர்த்துக் கொண்டால் அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள்  என சொல்ல வேண்டாம்” என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இந்த வீடியோ பலராலும்  பரவப்பட்டு வைரலாகி உள்ளது.   இதை சிவசேனாவின் ரமேஷ் சோலங்கி என்பவர் பார்த்து மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

தனது புகாரில் சோலங்கி, “புகார் அளிப்பது எனது சட்ட பூர்வ உரிமை ஆகும்.   இவ்வளவு புகழ் பெற்றவர்கள் இவ்வாறு நடப்பது நாட்டுக்கு நல்லது இல்லை.  தற்போதுள்ள மத அதிருப்தி சூழ்நிலையில் இந்த வீடியோ மிகவும் கேடு விளைவிக்கும்.  இவர்களுக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி நாட்டுக்கு எதிராக செயல்படுவதாக தோன்றுகிறது.    இந்தியாவில் மதக் கலவரத்தை உண்டாக்க இது ஒரு சதி” என குறிப்பிட்டுருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் மும்பை காவல்துறையினர் ஐவர் மீதும் வழக்குப் பதிந்தது.   அடுத்த நாள் டிக்டாக் செயலியில் இருந்து இவர்கள் பதிவிட்ட அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளது.   ஜூலை மாதம் 8 ஆம் தேதி அன்று ஃபைசல் ஷேக், “எங்கள் வீடியோ யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம்.  நாங்கள் யாரையும் புண்படுத்தவோ அவமானப்படுத்தவோ  எண்ணவில்லை.  அந்த வீடியோவை நாங்கள் அகற்றி விட்டோம். ஞெய்ஹிந்த்” என பதிந்துள்ளார்.

ஆனால் டிக்டாக் செயலி நிர்வாகம் இவர்கள் கணக்கை முடக்கி விட்டது.  இந்த மூவரும் முன் ஜாமின் கோரி மனு செய்துள்ளனர்.  கடந்த 23 ஆம் தேதி அன்று ஹஸ்னைன் கான் மற்றும் ஷடன் ஃபரூக்கி ஆகிய இருவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.  ஃபைசல் ஷேக் ஜாமின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.  இணைய தளங்களில் பலர் இந்த மூவருக்கு ஆதரவாகப் பதிவிட்டு வருவதால் கடும் பரபரப்பு உண்டாகி இருக்கிறது.