சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த நிரந்தர தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. அதற்கு பதில் மாற்று இடம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் இனிவரும் நாட்களில் எந்த ஒரு போராட்டமும் நடத்த அனுமதியில்லை என சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் அறிவித்து உள்ளார்.
சென்னை மாநகரின் மையப் பகுதியில் நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வள்ளுவர் கோட்டத்திற்கு மாற்று இடமாக சென்னை D1 திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவானந்தா சாலையில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.