சென்னை: இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், அதே விமானத்தில் பயணம் செய்த தனியார் வங்கி அதிகாரி ஒருவர், கடந்த 1991ம் ஆண்டு திமுக பிரச்சாரத்தில் தான் பேசியதை மீண்டும் பேசி காட்டினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று மாலை, ஒற்றுமைக்கான குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ பாதயாத்திரையை கன்னியாகுமரியில் இன்று மாலை தொடங்குகிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ராகுலிடம், காதியிலான தேசிய கொடியை வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். அப்போது, அவருடன் பயணம் செய்த வங்கி அதிகாரி ஒருவர், முதல்வரை சந்தித்து, தான் கடந்த 1991ம் ஆண்டு திமுகவுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதாக கூறினார். இதைக்கேட்டு வியப்படைந்த முதலமைச்சரிடம், அந்த வங்கி அதிகாரி, 1991ம் ஆண்டு திமுக பிரச்சாரத்தில் தான் பேசியதை அப்படியே மீண்டும், நேரடியாக பேசிக் காட்டினார்.
இதைகேட்டு வியப்படைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட விமாசனத்தில் பயணம் செய்த திமுக நிர்வாகிகள், பயணிகள் என பலரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அந்த வங்கி அதிகாரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.