2024 பொது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என்று பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தல் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் அனைத்து 300 தொகுதிகளிலும் EVM பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா 2022 மே மாதம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் செலவில் 150 தொகுதிகளில் EVM பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இந்த நிலையில், புதிய EVM மெஷின்களை வாங்கவும் பழைய EVM மெஷின்களை புதுப்பிக்கவும் தேவையான நிதியை அரசு ஒதுக்கவில்லை என்று கூறி 2024 ம் ஆண்டு நடைபெறவிருக்கும் 12வது பொதுத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என்று பங்களாதேஷ் தேர்தல் ஆணைய செயலாளர் ஜஹாங்கிர் ஆலம் அறிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் EVM இயந்திரங்கள் மூலம் பல முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டிவரும் எதிர்க்கட்சிகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தது.

இந்த நிலையில், பங்களாதேஷ் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.