லண்டன்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் மோதின.
டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தமிம் இக்பால் 16 ரன்னிலும், சவுமியா சர்க்கார் 42 ரன்னிலும் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நிலைத்து நின்று ஆடி 142 ரன்களை சேர்த்தது. ஷகிப் அல் ஹசன் 75 ரன்னிலும், மொகமது மிதுன் 21 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 78 ரன்னிலும் அவுட்டானார்.

இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்களை எடுத்தது. மகமதுல்லா 46 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ, கிறீஸ் மாரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து, 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. குயிண்டன் டி காக் 23 ரன்னிலும், மார்கிராம் 45 ரன்னிலும், டேவிட் மில்லர் 38 ரன்னிலும், வான்டெர் துஸ்சென் 41 ரன்னிலும், பெலுக்வாயோ 8 ரன்னிலும், கிறிஸ் மாரிஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் டு பிளசிஸ் மட்டும் அரை சதமடித்தார். அவரும் 62 ரன்னில் அவுட்டானார். டுமினி அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் அவரும் ம் 45 ரன்னில் அவுட்டானார்.
வங்காளதேசம் சார்பில் முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்களையும், மொகமது சபுதின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இறுதியில், 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களை தென் ஆப்பிரிக்கா அணி எடுத்தது. இதையடுத்து வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.