பெங்களூரு:

உ.பி.யில் முதல்வர் ஆதித்யநாத் நடவடிக்கையால் அங்கு சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மாட்டு இறைச்சி கூடங்கள் மூடப்பட்டது. இதை முன்னுதாரணமாக கொண்டு பெங்களூருவில் மாட்டு இறைச்சி கூடங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கவுரக்சகாஸ் என்ற இந்து அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெங்களூருவில் சட்டவிரோதமாக செயல்படும் ஆயிரத்து 700 இறைச்சி கடைகளை மூட வலியுறுத்தி பெங்களூரு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது. உ.பி.யில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை ரோல் மாடலாக கொண்டு தென் மாநிலங்களில் பாஜ எதிர்கட்சியாக இருக்கும் கர்நாடகாவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

‘‘உ.பியில் இறைச்சி கூடங்களை அதன் உரிமையாளர்களே முன்வந்து மூடுகிறார்கள். அதனால் உ.பி.யை நாம் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்’’ என்று கர்நாடகாக கோசலாஸ் கூட்டமைப்பு தலைவர் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.

கவ் சம்ரக்ஷனா பிரகோஸ்தா மற்றும் கர்நாடகா கோசலாஸ் ஆகியவை இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது. ‘‘பெங்களூருவில் மொத்தம் 43 இறைச்சி கடைகளுக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இறைச்சி கூடங்களை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பெங்களூரு மாநகராட்சி கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் ஸ்ரீராம் கூறுகையில், ‘‘மாநகரில் 3 ஆயிரத்து 600 இறைச்சி கூடங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கட்டட உரிமையாளர், அருகில் இருக்கும் கடைகளின் உரிமையாளர்களின் ஒப்புதல் அடிப்படையிலும், பல வித கட்டுப்பாடுகளுடன் தான் உரிமம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

‘‘மாநிலத்தில் மதவாதத்தை ஏற்படுத்தும் வகையில் இத்தகை செயல்பாடுகள் தலைதூக்குகிறது. சித்தாரமையா தலைமையிலான அரசு இதை முறியடிக்கும்’’ என அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். ‘‘யோகி முத்திரையுடன் காவி அரசியலை கர்நாடகா தேர்தலில் முன்னிறுத்த பாஜ முயற்சிக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி மத அரசியலை கண்டிப்பாக அனுமதிக்காது’’ என்று அவர் தெரிவித்தார்.