பெங்களூரு: பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை தொடர்பாக விசாரணை அறிக்கை கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 11ந்தேதி விசாரணைக்கு  சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில்  அவர்மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், உச்சநீதி மன்ற உத்தரவுபடி சசிகலா, அவரது உறவினர் இளவரசி, ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். இதனால், அவர்கள் பெங்களூருவில்  பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், சிறையில் இருந்தபோது,  சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, சிறையில்  சிறப்பு சலுகை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான பரபரப்பு படங்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு,  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு அமைத்து உத்தரவிட்டது.

இதற்கிடையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாதண்டனை காலம் நிறைவு பெற்று விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சசிகலா மீதான வழக்கில் 4 ஆண்டுகள் ஆகியும், ஊழல் தடுப்பு படை போலீசார் இதுவரை  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தனர். இது தொடர்பான வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் காவல்துறையினரை கடுமையாக விமர்சித்து, கெடு விதித்த நிலையில்,விசாரணை அறிக்கை வெளியானது.

வினய்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து , ‘சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை’ என 245 பக்க அளவில் அறிக்கை அளித்தது.

இந்த ஆய்வு அறிக்கையை  தொடர்ந்து, கர்நாடக  ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சிறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, ஆய்வாளர் பி.சுரேஷா, துணை ஆய்வாளர் கஜராஜா, சசிகலா, இளவரசி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பெங்களூரு மாநகர 24-வது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, கிருஷ்ணகுமார், அனிதா, பி.சுரேஷா, கஜராஜா, சசிகலா, இளவரசி ஆகிய 6 பேரும் மார்ச் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

மீண்டும் சிறைவாசம்? பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கையில் சசிகலாமீதான குற்றச்சாட்டு உறுதி…