பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம் விட பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது . இந்த வழக்கு பொங்களூரு தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. பின்னர் 2017-ம் ஆண்டு ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்புக்கு முன்பாகவே ஜெயலலிதா மரணம் அடைந்தார். மற்ற 3 பேரும் சிறை தண்டனை பெற்றனர்.  தீர்ப்பை அடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் வீட்டிலிருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பயன்படுத்திய பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், சுமார் 20 ஆண்டுகளாக   அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சால்வை, புடவை, காலணிகள் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், ஜெயலலிதாவிடம் இருந்து 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள் நீண்ட நாட்களாக அப்படியே உள்ளதாகவும், லெதர் காலணியாக இருந்தாலும் அதன் தரம் குறையும் என்பதால் அதை விற்று பணத்தைக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று  வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த பெங்களூரு சிவில் நீதிமன்றம், ஜெயலலிதாவின் புடவைகள், காலணிகள், சால்வைகள் உள்பட 29 பொருட்களை ஏலம் விட வேண்டும் என்றும், இந்த பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.