டில்லி

வங்கதேசத்தவர் கடலில் நீச்சல் அடித்து இத்தாலிக்குச் சென்று அங்கிருந்து இந்தியா வர  வேண்டும் என வங்கதேச தூதர் சையது முஸீம் அலி கூறி உள்ளார்.

தற்போது மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   அந்த சட்டத்தின் படி வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குக் குடி புகுவோரில் இந்துக்கள், கிறித்துவர், சமணர், பௌத்தர், பார்சி உள்ளிட்ட இனத்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என உள்ளது.   இதில் இஸ்லாமியர் பெயர் இடம் பெறாததால் இது சிறுபான்மையினருக்கு எதிரானது எனப் போராட்டம் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் வங்கதேச தூதராக பணியாற்றும் சையது முஸீம் அலி தற்போது வங்கதேசத்துக்குத் திரும்பச் செல்ல உள்ளார்.  இவர் நேற்று இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்தில் நடந்த தனது பிரிவுபச்சார விழாவில் உரையாற்றினார்.   அவர் தனது உரையில், “வங்க தேசத்தில் தற்போது ஜிடிபி வளர்ச்சி நன்கு உள்ளது.  இந்த வருடத்தில் ஜிடிபி வளர்ச்சி 8% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது 8.1% ஆக உயர்ந்துள்ளது.   ஆனால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது.

வங்க தேசத்தில் இருந்து வடகிழக்கு இந்தியாவுக்கு ஏராளமானோர் சட்டவிரோதமாகக் குடி பெயர்வதாக எங்கள் நாட்டின் மீது கடுமையான விமர்சனம் உள்ளது.   இதற்கு ஒரே வழி என்னவென்றால் இந்தியாவுக்கு வர விரும்பும் வங்க தேசத்தவர் கடலில் நீந்தி இத்தாலிக்குச் சென்று விட்டு அங்கிருந்து வர வேண்டும்.  வங்க தேச மக்கள் எங்கு அதிகம் சம்பாதிக்க முடியுமோ அங்கு தான் செல்வார்கள்.  ஆனால் தற்போது இந்தியரகளின் சராசரி வருமானம் அந்த அளவுக்கு அதிகமாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.