வெள்ளைத் தீவு, நியூசிலாந்து

நியூஜிலாந்து வெள்ளைத்தீவில் இன்று மதியம் எரிமலை வெடித்ததில் ஐவர் மரணம் அடைந்துள்ளனர்.

நியூஜிலாந்து நாட்டில் வெள்ளைத் தீவு என்னும் பகுதியில் எரிமலை ஒன்று பல நாட்களாக குமுறிக் கொண்டு இருந்துள்ளது.  அந்தப் பகுதியில் வசிக்கும் மாவுரி எனப்படும் பழங்குடி மக்கள் இந்த எரிமலையை வகாரி என அழைத்து வந்தனர்.  இந்த எரிமலை கடந்த 2016ஆம் ஆண்டு வெடித்தது.   அந்த சமயத்தில் யாரும் பாதிப்படையவில்லை.

இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் கந்தக வாயுவின் அளவு சில வாரங்களாக அதிகரித்து வந்துள்ளது.  ஆகவே தற்போது அந்த எரிமலை வெடிக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.  ஆயினும் இந்த எச்சரிக்கையை நியூசிலாந்து அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.11 மணிக்கு இந்த எரிமலை வெடித்துள்ளது.  நூற்றுக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் அங்கு கூடியிருந்த நேரத்தில் இந்த எரிமலை வெடித்துள்ளது.  இந்த எரிமலை வெடிப்பினால் சுமார் 5 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 20 பேர் வரை காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அங்கிருந்த பலர் தற்போது காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.  பொதுவாக எரிமலை வெடிப்பு என்பது 0-5 கட்டங்களாகக் கணக்கிடப்படும் தற்போது இந்த எரிமலை வெடிப்பு 4 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன், “நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த நிலையில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.  அதே வேளையில் காவல்துறையினர் 50க்கும் குறைவான மக்களே அங்கு உள்ளதாகச் சொல்லி உள்ளனர்.  மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.