சென்னை,

முன்னாள் முதல்வர் மறைந்ததை தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

தற்போது அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், சசி அதிமுக சார்பாக அவரது அக்காள் மகனும், ‘பெரா’ வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவருமான டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஓபிஎஸ் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக தொண்டர் ஒருவர் டிடிவி தினகரன் வேட்புமனுவை தேர்தல் கமிஷன் ஏற்க தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், அ.தி.மு.க.  துணைபொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர் ஜாேசப் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அதில், அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதால், அவரது மனுவை தேர்தல் கமிஷன் நிராகரிக்க வேண்டும் என்றும், சிறைத்தண்டனை யாக இல்லாமல் அபராதம் செலுத்திவருவதும் தண்டனையின் ஒருபகுதிதான்.

ஆகவே அவரது வேட்புமனுவை ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

டிடிவி தினகரன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே காஃபிபோசா சட்டத்தில் தினகரன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். அப்போது அவர், தன்னை சிங்கப்பூர் சிட்டிசன் என்று கோர்ட்டில் கூறியிருந்தார். இதுவும் தற்போது விவாதமாக சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சசி அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ். அதிமுக சார்பில்  மதுசூதனனும், திமுக சார்பில்  மருதுகணேஷும்,  எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும், தே.மு.தி.க சார்பில் மதிவாணனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டு உதயமும் போட்டியிடுகின்றனர்.