டெல்லி: நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இந்த தடையானது இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. அதன்படி,  100மைக்ரோனுக்கு குறைவான பிவிசி அல்லது பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குத் தடை விதிக்கப்படு கிறது.

இந்நிலையில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய (மறுசுழற்சி செய்ய இயலாத) குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை, பயன்பாடு, இறக்குமதி என அனைத்தும் நாடு முழுவதும் இன்று (ஜூலை 1ஆம் தேதி) முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை ஜூலை 1ம்தேதி முதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தடை செய்யப்பட்ட பொருள்களில் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க தேசிய மற்றும் மாநில எல்லைகளில் சோதனைசாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எந்தெந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு இன்று முதல் தடை:

பலூன் ஸ்டிக்ஸ், சிகரெட் பேக்ஸ், பிளேட்கள், கப்கள், கிளாஸ்கள், ஃபோர்க்ஸ் , ஸ்பூன்கள், கத்திகள், டிரேக்கள் உள்ளிட்ட கட்லரி பொருட்கள், பிளாஸ்டிக் ஸ்டிக்ஸ் கொண்ட இயர்பட்ஸ், ஸ்வீட் பாக்ஸ்களில் சுற்றப்படும் பிளாஸ்டிக் ரேப்பர், கேன்டி மற்றும் ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ், இன்விடேஷன் கார்ட்ஸ், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன், 100 மைக்ரானுக்கு கீழான PVC பேனர்ஸ், ஸ்ட்ராக்கள் உள்பட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பிளாஸ்டிக் தடையை மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியங்களும், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் கண்காணிக்க வேண்டும். பிளாஸ்டிக் தடை நிலவரம் குறித்து அவ்வப்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கெனவே தடை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.