பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க உய்ரநீதிமன்ற மதுரை கிளை நேற்றிரவு அனுமதி அளித்த நிலையில் இன்று நடைபெற்ற மேல்முறையீட்டு மனுமீதான விசாரணையில் அதற்கு தடை விதித்துள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை விதித்துள்ளது.
அப்போது, ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதால் புற்றுநோய் அதிக அளவில் பரவுகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன்பே நச்சுப்பொருட்கள் கலந்து சிலைகளை செய்யக்கூடாது என்ற உத்தரவு இருக்கும் போது அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை எல்லாமே விஷம் தான் என்று கூறினர்.
முன்னதாக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நிறுவனம் ஒன்றில் விநாயகர் சிலைகளை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க போலீசார் தடை விதித்ததை அடுத்து அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்துவதாக கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த சிலைகளை வாங்குபவர்கள் வீடுகள், கோயில்கள், திருமண மண்டபங்களில் வைக்கலாம். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்க முடியாது. அந்த சிலைகள் விற்கப்படுவதை அதிகாரிகள் தடுக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம், நீர் நிலைகளில் கரைக்க அனுமதியில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சார்பில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது.
இதனை அடுத்து ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்’ பயன்படுத்தி சிலை செய்து விற்பனை செய்வபவர்களை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.