பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜனவரி 22 ம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலங்களிலும் உள்ளரங்குகளில் 50 சதவீதம் அல்லது 300 பேருக்கு மிகாமல் கூட்டம் நடத்தவும் இணைய வழி பிரச்சாரத்திற்கும் அனுமதி அளித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு இணங்க தொகுதி, மாநிலம் மற்றும் தேசிய அளவில் மூன்றடுக்கு இணைய வழி பிரச்சாரத்துக்கு பா.ஜ.க. தயாராகி வருகிறது.

ஒவ்வொரு மாநில தலைநகரிலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாநில தலைவர்கள், தேசிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சுகளை ஒளிபரப்பு செய்யவும் அதனை காணவும் தேவையான உள்ளரங்குகள் மற்றும் பிரச்சார உத்திகளை வகுத்திருக்கிறது பா.ஜ.க.

ஐந்து மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மட்டும் நான்கு அடுக்காக, அதாவது மாநிலத்தை பல்வேறு மண்டலங்களாக பிரித்து, மண்டல வாரியாகவும் இணைய வழி பிரச்சார குழுக்களை அமைத்துள்ளது.

மலைப்பிரதேச மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் டெஹ்ராடூனில் உள்ள ஸ்டுடியோவில் இருந்து மூத்த தலைவர்கள் மெய்நிகர் பேரணிகளில் உரையாற்றுவார்கள். பேரணியில் கலந்துகொள்ள குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியின் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களின் மொபைல் போன்களில் அதற்கான இணைப்பு அனுப்பப்படும் என்று அம்மாநில பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியாகியிருக்கிறது.