தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது என பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழக அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள், 1973-ன் விதி 12-ஐ சுட்டிக்காட்டி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஏ. சோமசுந்தரம் வியாழக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, அரசு ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது. அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிடுவது, எதிர்மறையான மீம்ஸ்களைப் பகிர்வது போன்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது. அரசுகளுக்கு இடையிலான நல்லுறவைப் பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் அல்லது உரைகள் நிகழ்த்தப்படும் அதிகாரப்பூர்வமற்ற கூட்டங்களிலும் ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது. இந்த உத்தரவை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அதன் நோக்கம் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் இந்த உத்தரவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் உரிமை பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு இல்லை என அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “பணிநிரந்தரம் செய்யப்படாதது, ஊழியர்கள் சுரண்டப்படுவது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படாதது, அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத மற்றும் ஊழியர் விரோதக் கொள்கைகளையும், செவிலியர்கள் மீதான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எதிர்ப்போம். சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிடுவோம்; போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த உத்தரவு வழக்கமான நடைமுறைதான் என்று டாக்டர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்தவொரு நிறுவனத்திலும் பணியாற்றும் ஊழியர்கள், அந்த நிறுவனத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க அனுமதி இல்லை. விமர்சிக்க விரும்பினால், அந்த நிறுவனத்திலிருந்து வெளியேறிய பிறகு விமர்சிக்கலாம். இந்த உத்தரவு கூறுவதும் அதைத்தான்” என்றார்.