தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், அதிகக் கட்டணம் காரணமாக இறுதிக்கட்ட மருத்துவக் கலந்தாய்விலும் 824 எம்பிபிஎஸ் இடங்கள் நிரம்பவில்லை. நாடு முழுவதும் 11 லட்சம் பேர் நீட் 2026 தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஆண்டுக்கு ரூ.23 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதால் மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்டணத்தால் நிரம்பாத மருத்துவ இடங்கள்!
மருத்துவக் கலந்தாய்வுக் குழு நடத்திய அகில இந்திய இறுதிக்கட்டக் கலந்தாய்வில், நாடு முழுவதும் 3,426 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருந்தன. இதில் 837 இடங்களுக்கு மாணவர்கள் ஒதுக்கப்படவில்லை. அவற்றில் ஒரு இடம் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், 12 இடங்கள் கர்நாடகாவின் கோலாரில் உள்ள செட்டிநாடு மருத்துவக் கல்லூரியிலும் உள்ளன. எஞ்சிய 824 இடங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 14 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்குச் சொந்தமானவை.

சென்னையில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரியில் 250 இடங்களில் 188 இடங்கள் (75%) காலியாக உள்ளன. காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் 117 இடங்களும், புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் 92 இடங்களும், குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் 82 இடங்களும் நிரம்பவில்லை. எஸ்ஆர்எம், சவீதா உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் காலியாக உள்ளன.
ரூ.21 லட்சம் வரை கூடுதல் செலவு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக் கட்டணம் ரூ.23 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை உள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள இத்தகைய கல்லூரிகளில் சராசரிக் கட்டணம் ரூ.22.68 லட்சமாக உள்ளது. மகாராஷ்டிராவில் சராசரிக் கட்டணம் ரூ.24.58 லட்சமாகவும், கர்நாடகாவில் ரூ.20.85 லட்சமாகவும் இருக்கிறது.
இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மருத்துவம் படிப்பதற்கான மொத்தச் செலவு, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது 4.5 ஆண்டுகளில் சுமார் ரூ.21 லட்சம் வரை அதிகரிப்பதாக மருத்துவக் கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகக் கட்டணம் வசூலிக்கும் சில கல்லூரிகளில் இடங்கள் நிரம்பினாலும், மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆஃப் தரவரிசை கணிசமாகக் குறைந்துள்ளது. ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான கடைசி தரவரிசை 7.3 லட்சத்திலிருந்து 10.68 லட்சமாகக் குறைந்துள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட கட்டணத்தைச் செலுத்த முடியாததால் விண்ணப்பிக்கவில்லை என மருத்துவச் சேர்க்கை ஆலோசகர் மணிக்கவேல் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் என்ன பயன்? – காங்கிரஸ் கேள்வி!
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் இராம. சுகந்தன் தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 836 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதையும், ஆண்டுக் கட்டணம் ரூ.23 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

11 லட்சம் பேர் நீட் தேர்வில் தகுதி பெற்றும், பெற்றோரின் பொருளாதார வசதியைப் பொறுத்தே மருத்துவக் கல்வி கிடைக்கும் என்ற நிலை இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
தகுதி இருந்தும் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதால் என்ன பயன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக் கல்வி பணத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மாணவர்களின் தகுதியை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கும் வகையில் மத்திய அரசு அதிகப்படியான கட்டணத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டணத்துக்கு மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சனும் வலியுறுத்தியுள்ளார்.
இறுதிக்கட்டக் கலந்தாய்வு முடிந்துவிட்டதால், அரசு கூடுதல் கலந்தாய்வு நடத்த அனுமதித்தால் மட்டுமே இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பு ஏற்படும்.