சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்களில் தரகர் மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு  வருவாய் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில், பொதுமக்கள் நேரடியாக தங்களது குறைகள் மற்றும் தேவையான பூர்த்தி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. குறிப்பாக பதிவுத்துறை, ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மற்றும்  தற்காலிக ஊழியர்கள்  வைத்து, முறைகேடுகள் நடைபெற்று வந்தன. இது தொடர்பாக அரசுக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, முதற் கட்டமாக,  தமிழகத்தில்  உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்கள் நுழைவதற்கு  தடை விதித்து உத்தரவிட்டது. மீறினால்,   சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில்,  அடுத்த கட்டமாக வருவாய்த் துறையிலும் இதற்கான அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக -அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்,  தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களுக்குள் இடைத்தரகர்கள், தற்காலிக ஊழியர்கள் என தனி ஆட்கள் யாரும் உள்ளே வந்து பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. இதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இதைக் கண்டிப்புடன் பின்பற்றுவதுடன், கீழ்நிலை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.