டில்லி,

சசி அதிமுவின் தீவிர விசுவாசியும், மக்களவை துணை சபாநாயகருமான  தம்பிதுரை தலைமை யில் தமிழக அமைச்சர்கள் 4 பேர் மற்றும் ஆதரவு எம்.பிக்களுன்  டில்லியில் இந்திய தேர்தல் கமிஷனரை சந்தித்து பேசினர்.

முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலலாளருமான  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு,  ஓபிஎஸ் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் சசிகலா பொதுச்செயலாளர் ஆவ தற்கு ஆதரவு அளித்துவந்த  ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதின் காரணமாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
அதைத்தொடர்ந்து  அதிமுக சட்டவிதிகளுக்கு முரணாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அப்பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடமும் ஓபிஎஸ் அணி மைத்ரேயன் தலைமையில் அவரது ஆதரவு எம்.பி.க்கள்  சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதற்கு சசிகலா பதில் அளித்தார். அதை ஏற்க மறுத்துவிட்டது தேர்தல் ஆணையம். அதைத்தொடர்ந்து 70 பக்கங்கள் கொண்ட விரிவான விளக்கம்  சசி அணி சார்பில் அளிக்கப்பட்டது. அதற்கு ஓபிஎஸ் சார்பில் பதில் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இரட்டை இலை சின்னத்தைப் பெற இரு அணிகளும் பகிரத பிரயத்தனம் செய்து வருகின்றன.

நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் டில்லி சென்று தேர்தல் ஆணையரை சந்தித்து இரட்டை இலையை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரினார்.

அதற்கு எதிராக இன்று மக்களவை துணைசபாநாயகர் தம்பித்துரை தலைமையில் ஒரு அணியினர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து இரட்டை இலையை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தம்பித்துரை கூறியதாவது,

சசிகலா தேர்வு செய்யப்பட்டது பற்றி ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதாகவும், சசிகலாவை  அதிமுக பொதுக்குழு தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்ததாகவும்,  இரட்டை இலை சின்னத்தை பன்னீர்செல்வம் அணி கேட்பது நியாயமல்ல என்றும் கூறினார்.

மேலும், அதிமுகவில் எந்த பிளவும் ஏற்படவில்லை என்றும், சசிகலா இடைக்கால பொதுச்செய லாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், விரைவில் பொதுச்செயலாளர் தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் ஓபிஎஸ் அதிமுக மற்றும், சசி அதிமுக ஆகிய இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை கோரி தேர்தல் ஆணையத்தை வற்புறுத்தி வருவதால், இரட்டையை இலையை யாருக்கும் கொடுக்காமல் முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் சொல்கின்றன…