சென்னை:
க்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமைதியான, வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நமது இளம் தலைமுறையினருக்கு நற்சிந்தனை, கருணை, பெருந்தன்மை ஆகியவற்றை வழங்குவதற்கு இந்நன்னாளில் உறுதி கொள்வோம். இந்த தியாகத் திருநாளானது நம் அனைவருக்கும் அன்பின் வலிமையையும், நல்லிணக்கத்தையும், உடல்நலன், மகிழ்ச்சியையும், நமது பெரும் முயற்சிகளில் வெற்றியையும் அளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத்தியாகப்பெருநாளை மகிழ்ச்சியுடனும், கரோனா கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து பாதுகாப்புடனும் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகோர் அனைவரும் ஒரே தாய், தந்தை வழி வந்தவர்கள் என்ற நபிகள் நாயகம்கூறிய உண்மையை உணர்ந்து சகோதரத்துவம், சமாதானம் போன்றவற்றை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ முற்படுவதே மனித இனத்தின் குறிக்கோளாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.