ஜெனிவா: கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், உலகில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாக ஆப்பிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி வருகிறது.

அதேசமயத்தில், உலகின் பணக்கார நாடுகளுக்கு அதிவேகத்தில் தடுப்பு மருந்துகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கு, ஏழை நாடுகளைக் காட்டிலும் 25 மடங்கு அதிவேகமாக தடுப்பு மருந்துகள் சென்று சேர்கின்றன என ஓர் ஆய்வு கூறுகிறது.

ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் இதுகுறித்த ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதில் உலகின் 154 நாடுகளுக்கு 726 மில்லியன் தடுப்புமருந்து வழங்கப்படுவதாக கூறப்பட்டது.

உலகின் 4.3% மக்கள் தொகையைக் கொண்ட வல்லரசு நாடான அமெரிக்காவில் உலகில் 24% தடுப்பு மருந்துகள் அதிவேகத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேசமயம், பாகிஸ்தான் நாட்டில் 0.1% தடுப்பு மருந்துகளை விநியோகிக்கப்பட்டுள்ளன. பணக்கார நாடுகள் அதிகளவு தடுப்பு மருந்துகளை விலைகொடுத்து வாங்கி விட்டன. குறிப்பாக அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் 75% குடிமக்களுக்கு தடுப்புமருந்து சென்று சேர்ந்துவிடும். அதேசமயத்தில், உலகளவில் 8% மக்கள் தொகைக்கொண்ட 40 ஏழை நாடுகளுக்கு தடுப்புமருந்து சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது.

உலகின் 18% மக்கள் தொகையை கொண்டிருக்கும் மிகப்பெரிய நாடான சீனாவில், உலகளவில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளில் 20% தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு விட்டன. உலகின் பின்தங்கிய கண்டமான ஆப்பிரிக்காவில் 54 நாடுகள் உள்ளன. இவற்றில் வெறும் மூன்று நாடுகளில், 1%க்கும் குறைவான மக்களுக்கே தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்னும் தடுப்பு மருந்து சென்று சேரவே இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம் என்று கூறப்பட்டுள்ளது.