இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளர்களில் ஒருவர் பேராசிரியர் அனில் சடகோபால். தற்போது இவர் நாடு முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார்.
சென்னையில் கடந்த 22-05-17 அன்று, நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அவரது கருத்து அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது சோகம்தான்.
இப்போதேனும் அவரது பேச்சை காது கொடுத்து கேட்பது அவசியம்.
இதோ அவரது பேச்சு..’கல்வியாளரான நான், ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறேன் என்ற கேள்வி என்முன் வைக்கப்படுகிறது. நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்ற அக்கறை எனக்கு இல்லையா என்றும் கேட்கப்படுகிறது.
நான் ஒரு கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதால்தான் எதிர்க்கிறன். இந்த நீட் தேர்வால் கல்வித்தரம் மேம்படும் என்று ஆளும் தரப்பு பிரச்சாரம் செய்வது மக்களை ஏமாற்றும் வேலை. உண்மையாக.. இந்த நீட் நீட்_தேர்வு_இந்திய அரசியலமைப்புச்_சட்டத்துக்கே எதிரானது ஆகும்.
நமது அரசியலமைப்புச் சட்டம் சமூகநீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேர் எதிராக உள்ளது.
இந்தியா என்பது ஒற்றைத் தேசம் இல்லை. இது பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு ஆகும்,
பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு முறை என்பது முழு முட்டாள்த்தனம். அயோக்கியத்தனம்.
கல்வி உட்பட அடிப்படை வசதிகள் ஏதும் முழுமையாக இதுவரை சென்று சேராத, வட கிழக்கு பகுதி மாணவனும், எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்ற டில்லி பகுதி மாணவனும் ஒன்றா? . இருவருமனமபஉன ஒரே தேர்வு என்பது மக்களை முட்டாளாக்கும் வேலை அல்லவா?
தவிர புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதன் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.’
இப்படி நான் சொல்வதால், அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. கால மாற்றத்துக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கைகளும் அறிமுகப்படுத்த வேண்டும்தான். ஆனால் இந்த மாற்றங்கள், நிறுவனங்களின் நலனுக்கானதாக இருக்கக்கூடாது. நமது மாணவர்களின் நலனுக்காக இருக்க வேண்டும்.
ஆனால், தற்போது நமது கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை, பெரும் நிறுவனங்கள்தான் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன.
மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு போரையே நடத்திக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
இந்த போர் நமது நாட்டுக்கு, இயற்கை வளங்களுக்கு, மக்களுக்கு எதிரானது.
லாப வெறி மட்டுமே அவர்களது குறிக்கோள். இந்த லாப வெறியின் ஒரு பிள்ளைதான் நீட் தேர்வு ஆகும்.
இதை சற்று விரிவாகவே சொல்கிறேன்.
‘உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்திருக்கிறது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது ஆகும்.
இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு கொண்டுவரப்பட்டிருக்கிறது.
தற்போது உள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே கிடையாது. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழிந்துவிடும்.
அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வந்து சேரும். நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில் புரிந்துகொள்வது அவசியம். இது சர்வதேச அரசியல் பின்னணியில் நாம் கொண்டிருக்க வேண்டிய புரிதல்.
இன்னொன்று… சமூகநீதி கண்ணோட்டத்தின் அடிப்படையிலான பார்வை. அப்படிப் பார்த்தால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் நுழைய விடாமல் கழித்துக்கட்டும் அரசியல் இருப்பதை உணர முடியும்.
சிலர், தகுதி தகுதி என்கிறார்கள்.
தகுதி என்பது எதைவைத்து தீர்மானிக்கப்படுகிறது?
தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு ஒடுக்கப்பட்ட மாணவன் மிகச் சிரமமப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறார்கள்.
சிந்தித்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியாது. ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், இவனையும் ஒரே தராசில் வைத்து நிறுக்க முடிவு செய்கிறீர்கள்.
இது தவறல்லவா?
எல்லாவற்றையும் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்தும் கொஞ்சம் யோசியுங்கள்.
வடகிழக்கு பகுதி.. டில்லி.. என நாட்டின் இரு பகுதிகளைப் பார்த்தோம். ஒரு மாநிலத்துக்குள்ளேயே பாருங்கள்.. வசதி வாய்ப்புகளில் எத்தனை ஏற்றத்தாழ்வு இருக்கிறது.. உதாரணமாக தமிழகத்தை எடுத்துக்கொள்வோம். ராமநாதபுரம் அல்லது விழுப்புரம் மாவட்டத்தின் மிகப் பின்தங்கிய கிராமத்து மாணவன்.. அனைத்து வசதிகளும் இருக்கும் சென்னை மாணவனுடன் போட்டி போடுவது சரியாக இருக்குமா?
ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு ஏற்றத்தாழ்வு.. பிரச்சனைகள் இருக்கும்போது பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு தவறல்லவா?
‘சரி, இதற்கு தீர்வுதான் என்ன?
கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு. தமிழகம் தங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது. கூட்டாட்சி தத்துவத்தின்படி, இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
கல்வியை வணிகமாக நோக்கத்தோடு அணுகக்கூடாது. அனைவருக்கும் அனைவருக்கும் தரமான இலவச கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
முதலாளித்துவ நாடான ஜெர்மனியும் சரி…
பொதுவுடமை நாடான கியூபாவும் சரி… கல்வியை இப்படித்தான் பார்க்கின்றன.
ஆனால், இத்தனை பாகுபாடு இருக்கும் ஒரு நாட்டில் கல்வியை வணிகமாகப் பார்ப்பது எவ்வளவு தவறு?
ஒரு சிலர், தமிழகம்மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது என்று கேட்கிறார்கள். அதற்காக தமிழர்கள் பெருமைகொள்ள வேண்டும். இதற்கு, அயோத்திதாச பண்டிதர், பெரியார் ஏற்படுத்திய ஞானம்தான் காரணம். பிற மாநிலங்களைவிட தமிழக மக்கள்தான் எது சமூக நீதி என்பதை தெளிவாக அறிந்திருக்கிறார்கள். அதனால்தான், சமூக நீதிக்கு எதிராக ஏதும் நடந்தால் எதிர்த்து போராடுகிறீர்கள்” இவ்வாறு பேராசிரியர் அனில் சடகோபால் பேசினார்.
அவர் பேசியபோது அனிதா உயிருடன்தான் இருந்தார். சடகோபால் உள்ளிட்டோரின் பேச்சுக்களை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாததன் விளைவு… இப்போது அனிதா நம்மிடையே இல்லை.