கொல்கத்தா: போலி புகைப்படம் பகிர்ந்ததற்காக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.
தலைமைச் செயலாளர் ராஜீவ் சின்ஹா, மேற்கு வங்க ​முதலமைச்சர் மமதா பானர்ஜியின் சகோதரர் கார்த்திக் பானர்ஜி உள்ளிட்டோருடன் மதுபானங்களை பகிர்ந்துகொள்வதை போன்ற ஒரு “போலி” புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக அவர் மீது கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாபுல் சுப்ரியோ மீது ஐபிசி பிரிவுகள் 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 505 (பொது குறும்புகளை ஏற்படுத்தும் அறிக்கைகள்) மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மே 8ம் தேதி சுப்ரியோ புகைப்படத்தைப் பகிர்ந்த பின்னர் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர் மீது பதிவு செய்யப்பட்ட சில பிரிவுகள் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளாகும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் சுப்ரியோ மீது மட்டுமல்ல, இந்த போலி புகைப்படத்தைப் பகிர்ந்த சிலருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். போலி பதிவுகள், புகைப்படங்களைப் பகிர்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.