கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட உயர்ந்து வரும் நீர் மட்டம் : வெள்ளம் வருமா?

Must read

திருவனந்தபுரம்

கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட நீர் மட்டம் உயர்ந்து வருவதால் 2018 ஆம் வருடத்தைப் போல் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரள மாநிலம் அதிகம் மழை பெய்யும் மாநிலம் ஆகும்.   எனவே இந்த மாநிலத்தில் அணைகள் மூலம் நீர் சேகரிக்கப்பட்டு நீர் மின் நிலையுங்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.   அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.   தற்போது கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மின் தேவை மிகவும் குறைந்துள்ளது.

எனவே கேரள அணைகளில் இருந்து மின் உற்பத்திக்காக நீர் திறப்பது வெகுவாக குறைந்துள்ளது.  எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் சென்ற வருடத்தை விட தற்போது நீர்மட்டம் மிகவும் உயர்ந்து வருகிறது.   வரும் மழைக்காலத்தில் கேரளாவில் வழக்கமான அளவு மழைபெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மழை பெய்தால் அதிக கொள்ளளவைக் கொண்ட இடுக்கி உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் மேலும் நீர் தேங்கும்.  எனவே அந்த நீரைத் திறந்து விடும் போது வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.  கடந்த 2018 ஆம் வருடம் ஏற்பட்டது போல் வெள்ளம் வர வாய்ப்புள்ளதால் வெள்ள தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு இப்போதே எடுக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சீதாராமன் தலைமையில் அனைத்து கேரள நதிகள் பாதுகாப்புக்குழு  அரசுக்கு அளித்துள்ள கடிதத்தில், “ஜூன் மாத முதல் வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த வருடம் வழக்கமான அல்லது வழக்கத்துக்கு அதிகமான அளவில் மழை பெய்யக்கூடுமெனா கணித்துள்ளன.

கடந்த இரு வருடங்களாக தென்மேற்கு கடற்பகுதி மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் அதிக அளவில் மழைபெய்து வருகிறது  எனவே இந்த வருடமும் அதைப் போல் பெய்து இப்போதும் வெள்ள அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.   எனவே அரசு இந்த வெள்ள அபாயத்தைத் தடுக்க மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் மின்சாரம் தயாரிக்கும் அணைகளில் தற்போது 36% அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது.  சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 25.9% மட்டுமே நீர் இருந்ததாகக் கேரள மாநில மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.   இது சுமார் 10% அதிகமாகும்.   வழக்கமாக மே மாத இறுதியில் மின் உற்பத்தி அணைகளில் நீர்மட்டம் 20%க்கும் குறைவான நிலையை எட்டும். ஆனால் தற்போது மின் தேவை மிக மிக குறைந்துள்ளதால் நீர் மட்டம் 30%க்கும் அதிகமாக இருக்கக் கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய அணை எனக் கூறப்படும் இடுக்கி அணையில் கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 31 ஆம் தேதி 20% நீர் இருந்தது.   இதனால் மழைக்காலம் தொடங்கியதும் ஜூலை இறுதியில் நீர்மட்டம் 95% ஐ எட்டியது.  தற்போது மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே 36% நீர் உள்ளதால் இது மேலும் விரைவில் நிரம்பி விடும் எனவும் இதனால் வெள்ள அபாயம் 2018 ஐ விட அதிக அளவில் இருக்கலாம் எனவும் ஒரு சில மழை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.   மேலும் இந்த அணையை தற்போது திறந்து 15% நீரை மட்டும் அணையில் தேக்கி வைப்பது நல்ல பலன் அளிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகம் உள்ள நிலையில் மக்கள் அனைவரையும் ஒரே முகாம்களுக்கு மாற்றுவதில் மிகவும் சிரமம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.  மேலும் 2018 மற்றும் 2019 ஆம் வருட மழைக்காலத்தில் ஒரே நாளில் 30 செமீ, 40 செமீ என மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  எனவே இத்தகைய அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களை கொரோனா தொற்று முன்னெச்சரிக்கைக்கு உட்பட்ட வகையில் முன்கூட்டியே இடமாற்றம் செய்ய வேண்டி இருக்கும்.

மழைக்காலம் தொடங்கியதில் இருந்தே அணைகளின் நீர் மட்டத்தை மணிக்கு அல்லது அரை மணிக்கு ஒருமுறை கண்காணித்து உடனடியாக அதற்கேற்ற நடவடிகைளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த சாலகுடிபுழா சம்ரக்‌ஷனா சமிதி செயலர் ரவி கேரள மாநில பேரிடர் மேலாண்மை படை தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்

கேரள மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலர் சேகர் குரியகோஸ், “ஒவ்வொரு வருடமும் நாங்கள் வழக்கமாக ஒரு செயல் திட்டத்தை பினற்ரி வருகிறோம்.  மாநில தலைமைச் செயலர் தலைமையிலான செயற்குழு ஏற்கனவே ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் இது குறித்துத் தெரிவித்துள்ளன.

அதைத் தவிர வரும் 15 ஆம் தேதி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ஒவ்வொரு துறையிலும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.  கடந்த 2018 ஆம் வருடம் இரவில் அணைகள் திறக்கப்பட்டதால் பலரும் வெள்ளத்தில் சிக்க நேர்ந்தது.   ஆனால் இனி அணைகள் மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை திறந்து விடப்பட மாட்டாது.” என உறுதி அளித்துள்ளார்.

More articles

Latest article