ராஜஸ்தான் மாநில முதல்வர் தேர்வில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் முதல்வர் போட்டியில் இருந்து பாபா பாலக்நாத் விலகியுள்ளார்.

திஜாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ பாபா பாலக்நாத் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் முதல்வராக இரண்டு முறை பதவி வகித்த வசுந்தராராஜே சிந்தியா மீண்டும் முதல்வர் பதவிக்கு கடுமையாக முயற்சித்து வருகிறார்.

60 க்கும் மேற்பட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் வசுந்தராராஜே சிந்தியாவை ஆதரிக்கும் நிலையில் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து டெல்லி சென்ற சிந்தியா பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து முதல்வர் பதவி குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் முதல்வர் பதவி போட்டியில் தனது பெயர் அடிபடுவது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ., பாபா பாலக்நாத், “தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் தனது பெயரை முதல்வர் பதவிக்கு முன்னிலைபடுத்தப்படுவது தேவையற்றுது. சட்டமன்ற உறுப்பினராக பொதுமக்களுக்கு சேவை செய்ய வாய்பளித்துள்ள பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து செயல்படுவேன். நான் முதல்வர் பதவிக்கு போட்டியிடவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.