சென்னை:
ஆயுத பூஜை, சரஸ்வதி பண்டிகையை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
கவர்னர் பன்வாரிலால் புரோகித்
மக்கள் அனைவரையும் தீமையிலிருந்து பாதுகாக்கும் துா்கா தேவியை போற்றும் வகையிலேயே நவராத்திரி திருநாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்தப் பண்டிகை கொண்டாடப்பட்டு, பத்தாவது நாளில் வெற்றிநாளாக விஜயதசமி திருநாள் கொண்டாடப்படுகிறது. அதுபோல, தீமைகளுக்கு எதிராக நன்மை வெற்றி கொள்வதைக் குறிக்கும் ஆயுத பூஜை திருநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்த நன்நாளில் தமிழக மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், சமூக நல்லிணக்கம் மலரவும், வாழ்வு மேம்பாடு அடையவும் வாழ்த்துகிறேன்.
முதல்வா் எடப்பாடி பழனிசாமி:
நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் ஆயுத பூஜையும், பத்தாவது நாளில் விஜயதசமி திருநாளையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாள்களில், முதல் மூன்று நாள்கள் துணிவைத் தரும் மலை மகளையும், அடுத்த மூன்று நாள்கள் செல்வத்தை வாரி வழங்கும் திருமகளையும், இறுதி மூன்று நாள்கள் அழிவில்லா செல்வமான கல்விச் செல்வத்தை அருளும் கலைமகளையும் மக்கள் போற்றி வணங்குவது சிறப்பு.
உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழில் கருவிகளை இறைறபொருள்களாகப் பாவித்து, தொழில் வளம் பெருகி, வாழ்வு வளம்பெற வேண்டும் என்று அப்பொருள்களுக்கு பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுத பூஜை நன்நாள்.
வெற்றி திருநாளாம் விஜயதசமி நாளன்று தொடங்கப்படும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், மக்கள் இறைறவனை வணங்கி, கல்வி, கலை, தொழில் போன்றவற்றைதொடங்கி விஜயதசமி திருநாளை கொண்டாடுவா்.
இத்தகைய சிறப்புமிக்க திருநாள்களைக் கொண்டாடும் தமிழக மக்களுக்கு மீண்டும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.
துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம்:
சிறப்பு மிக்க ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில், அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெற்று, எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்.
டிடிவி தினகரன் (அமமுக):
தொழிலின் சிறப்பையும், உழைப்பின் மேன்மையையும் உலகிற்குச் சொல்லும் ஆயுத பூஜை மற்றும் வெற்றித் திருநாளான விஜயதசமி ஆகியவற்றைக் கொண்டாடும் தமிழக மக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
ரவி பச்சமுத்து (இந்திய ஜனநாயக கட்சி):
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை, விஜயதசமி திருநாள் வாழ்த்துகள்.