சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் மூலம் கடந்த 3 நாட்களில் 4.80லட்சம் பேர் பயணம்  மேற்கொண்டு உள்ளதாகவும், இந்த சிறப்புப் பேருந்துகள் வரும் புதன்கிழமை வரை இயக்கப்படும் என  தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

தொடர் விடுமுறையையொட்டி  பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு வழக்கமாக இயக்கப்படும் விரைவு பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இதற்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. . ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் இன்றும், நாளையும் (செவ்வாய் வரை) கொண்டாடப்பட்டு வருகின்றன. முன்னதாக, வெள்ளிக்கிழமை முதலே சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.  தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 2,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  பயணிகளின் வசதிக்காக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.  சென்னை உள்பட நகர்புறங்களில் இருந்து ஏராளமானோர்,  சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் கடந்த 3 நாள்களில் 4.80 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று இரவு 12 மணிவரை சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு 8,003 பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் புதன்கிழமை வரை பிற பகுதிகளிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.