சென்னை: தமிழ்நாட்டில் ஆயுதபூஜையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், 30 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன்முலம் ரூ.27.67 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னைவாசிகள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சாதாரண நாட்களை விட 2 மடங்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மத்திய வட்டாரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்ததாக கோவையில் 21 ஆம்னி பேருந்துகளும், சென்னையில் 9  ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கோவை மாநகரில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 18 ஆம்னி பேருந்துகளை மத்திய வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும்,  சாலை வரி கட்டாத  ஆம்னி பேருந்துகளை மடக்கி அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ரூ.27லட்சத்து 67 ஆயிரம்  அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இனிமேலும்  கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.