டெல்லி: திரைப்படங்கள் குறித்து தேவையற்றக் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்  பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறி உள்ளார்.

நாடு முழுவதும் இந்த ஆண்டு 9 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து,  தலைநகர் டெல்லியில்  பாஜக தேசிய செயற்குழு கூட்டம் 2 நாள் நடைபெற்றது. இதில் தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இந்தக் கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 400 நாட்கள்தான் இருக்கிறது, ஆதலால், சமூகத்தின் அனைத்துதரப்பு மக்களையும் சந்தித்து பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் சிறந்த சகாப்தம் வந்து கொண்டிருக்கிறது, நாட்டின் வளர்ச்சிக்காக, மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், போராஸ், பாஸ்மண்டாஸ், சீக்கியர்கள் அனைவரையும் சந்தித்து தேர்தல் நிர்பந்தம் ஏதும் இல்லாமல், கோரிக்கை இல்லாமல் பணியாற்ற வேண்டும்.

காசி தமிழ்சங்கமம் நிகழ்ச்சியின்போது, இரு மண்டலத்தைச் சேர்ந்த மக்கள் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்ள முடிந்தது. வரலாறு படைக்க யார் உறுதி எடுத்துள்ளார்களோ அவர்களால்தான் முடியும். பாஜக வரலாறுபடைக்க உறுதி எடுத்துள்ளது, வரலாறு படைக்கும்.

18 முதல் 25வயதுள்ள பிரிவினர் நாட்டின் அரசியல் வரலாறு தெரியவில்லை, கடந்த கால அரசின்ஊழல், தவறுகள் குறித்தும் தெரியவில்லை. அவர்களுக்குத் அதை உணரவைக்க வேண்டும், புரிய வைக்க வேண்டும்.

எதிர்க்கட்சியினரை குறைத்து மதிப்பிடாதீர்கள், ஒதுக்கப்பட்டவர்களை சந்தித்து பேசுங்கள், அவர்களிடம்  பாஜகவின் சிறந்த நிர்வாகம், ஊழல் இல்லாத ஆட்சியை பற்றிக் கூற வேண்டும். பாஜக என்பது அரசியல் இயக்கம் என்பதைவிட, சமூக இயக்கமாக இருக்க வேண்டும்.

திரைப்படங்கள் குறித்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் தேவையற்றக் கருத்துக் களைக் கூறுவதைத் தவிர்க்கவேண்டும்,

அரசின் பல நல்ல செயல்பாடுகளை இந்த சர்ச்சைகள் மறைத்து விடுகின்றன. அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். மோடி பிரசாரம் செய்தால் வென்றுவிடலாம் என நினைக்காதீர்கள்.

ஓட்டுகளைப் பற்றி கவலைப்படாமல், ஒதுக்கப்பட்ட பிரிவினரை அணுகுங்கள் என்று மோடி பாஜக தொண்டர்களிடம் கூறினார். மேலும், ஆர்வமுள்ள மாவட்டங்களை மேம்படுத்தவும், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுமாறு வலியுறுத்தப்பட்டது.என்பது உள்பட பல அறிவுரைகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீபத்தில் பாலிவுட் இயக்குநர்களும் நடிகர்களும் இந்துக்களை ஏளனம் செய்யும் வகையில் படங்களை எடுப்பதாக பதான் பட விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ஷாருக்கானை கடுமையாக சாடினார். அந்த படத்தில்,  தீபிகா படுகோன் அணிந்த ஆடை குறித்து பாஜக தலைவர்கள் நரோட்டம் மிஸ்ரா, ராம் காதம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிரதமர் மோடி, சினிமா பற்றி தேவையற்ற கருத்துக்களை பேச வேண்டாம் என அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி பேசியது குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் “ சமூகத்தின் அனைத்துதரப்பு மக்களையும் பாஜக நிர்வாகிகள் சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அரசியல் தலைவர் போன்று பேசாமல், கட்சிக்கு அப்பாற்பட்டு உயர்ந்த மனிதர் போன்று பிரதமர் பேச்சு இருந்தது. பாஜக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உற்சாகம் அளிக்கக்கூடிய வகையில் இருந்தது. அனைவருக்குமான செயல்திட்டத்தை காண்பித்துள்ளார் மோடி” எனத் தெரிவித்தார்