டில்லி

ண்டிகை காலங்களில் அதிகம் கூட்டம் கூட வாய்ப்புள்ளதால் மாநில அரசுகள் பண்டிகை கொண்டாட்டங்களைத் தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை  பாதிப்பு நாடெங்கும் குறைந்து வருகிறது.  ஆனால் ஒரு சில மாநிலங்களில் மட்டும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.   அதிக கூட்டம் கூடும் இடங்களில் கொரோனா வேகமாகப் பரவ மிகவும் வாய்ப்புள்ளது.   கொரோனா குறைவால்  பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”கொரோனா இரண்டாம் அலை பரவலின் வேகத்தைக் குறைக்க ஒத்துழைத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  புதிய நோயாளிகள் எண்ணிக்கை பொதுவாகக் குறைந்துள்ள வேளையில் ஒரு சில மாநிலங்களில் தினசரி  பாதிப்பு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் பல முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட  உள்ளன.  அதாவது ஆகஸ்ட் 19 மொகரம், ஆகஸ்ட் 21 ஓணம், ஆகஸ்ட் 30 ஜன்மாஷ்டமி, செப்டம்பர் 10 விநாயக சதுர்த்தி மற்றும் அக்டோபர் 5 முதல் 15 வரை நவராத்திரி ஆகியவை வருகின்றன.

இந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் கொரோனா பரவல் மிகவும் அதிகரிக்க வாய்ப்புண்டு என ஐ சி எம் ஆர் அச்சம் தெரிவித்துள்ளது.   எனவே மாநிலங்கள் இந்த பண்டிகை கொண்டாட்டங்களைத் தவிர்க்க வசதியாகக் கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.   இது குறித்து ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேளையில் சோதனை, கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகிய முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் எனவும் இதில் சிறிதளவு தவறுதல் நடந்தாலும் அது கொரோனா பரவல் அதிகரிக்கச் செய்யும் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்.  எனவே இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.