th
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது.
தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 7 ஆயிரத்து 156 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஆண்கள் 6 ஆயிரத்து 358 பேர். பெண்கள் 794 பேர். மூன்றாம் பாலினத்தவர் 4 பேர்.
வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரி மற்றும் மத்திய தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் 4 ஆயிரத்து 200 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 2 ஆயிரத்து 956 மனுக்கள் பல்வேறு காரணங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டன. தள்ளுபடி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் அனைத்தும் சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களாகும். 4 தொகுதிகளில் மட்டும் பா.ம.க. வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 60 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில்13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு மீதி 47 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற விரும்புபவர்கள் இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அப்போது பலர் மனுவை வாபஸ் பெற வாய்ப்புள்ளது. அதன்பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு எந்தெந்த தொகுதிகளில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எந்தெந்த தொகுதிகளில் குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்ற விவரம் தெரியவரும்.