kuspu
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே இருக்கும் நிலையில் நடிகர்-நடிகைகள் பிரச்சாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர்-நடிகைகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், செந்தில், மனோபாலா, பொன்னம்பலம், குண்டு கல்யாணம், சிங்கமுத்து, வையாபுரி, நடிகைகள் விந்தியா, பாத்திமா பாபு ஆகியோர் பிரசாரம் செய்து வருகிறார்கள். 234 தொகுதிகளிலும் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
மேலும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். நடிகை ராதிகா திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
சமீபத்தில் தி.மு.க.வில் சேர்ந்த நடிகரும், டி.வி. தொகுப்பாளருமான இமான் அண்ணாச்சி நாளை (30-ந் தேதி) முதல் மே 14-ந்தேதி வரை தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
நடிகர் வாசுவிக்ரம் வருகிற 1-ந்தேதி முதல் 14-ந் தேதிவரை வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
நடிகர் போஸ் வெங்கட் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து மே 1-ந்தேதி முதல் 14-ந்தேதிவரை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறார். திண்டுக்கல் லியோனி மே 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விஜயகுமார், நடிகை காயத்ரி ரகுராம், டைரக்டர் கங்கை அமரன் ஆகியோரும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.