iop1
”அமைதி பூங்கா” என்று ஜெயலலிதா சொன்ன 24 மணி நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு” சாயம் வெளுத்து விட்டது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பகண்டை கூட்டுரோட்டில் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின்,
தயவுசெய்து முதலில் 108 ஆம்புலன்ஸ் வண்டிக்கு கழகத் தோழர்கள் வழி விட்டு ஒதுங்கி நிற்க வேண்டும். நேற்றக்கு கூட ஜெயலலிதாவின் பிரச்சாரம் நடந்த விருத்தாசலத்தில் பொதுக்கூட்டத்திலேயே 2 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். நாம் அவரை போல இருக்காமல் உயிருக்கு போராடியபடி ஆம்புலன்சில் செல்பவர்களுக்கு வழி விடவேண்டும். இது திமுக. தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டு இருக்கக் கூடிய, அவரது வழியில் நடக்கக் கூடிய திமுக. அதுமட்டுமல்ல, இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்து ஆபத்தான நிலையில் உள்ள பல பேரின் உயிர்களை காத்ததும் தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
இன்றைக்கு காலையில் இருந்து ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் செய்தி என்னவென்று கேட்டால், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படக் கூடிய செய்திதான் இன்று முழுவதும் வந்திருக்கிறது. அடக்குமுறைகளுக்கு அதிமுகவினர் எப்படியெல்லாம் துணை நிற்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. நேற்றைக்கு சேலத்திற்கு சென்ற ஜெயலலிதா சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது என்று பேசியிருக்கிறார். தமிழ்நாடே அமைதியாக உள்ளது என்று பேசியிருக்கிறார். ஆனால் இன்றைக்கு பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட செய்தி வந்து கொண்டிருக்கிறது. என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டார்கள் என்று கேட்டால் அந்த அம்மையார் நேற்று சேலம் கூட்டத்தில் பேசியபோது 2 பேர் இறந்திருக்கிறார்கள். ஏற்கனவே விருத்தாசலத்தில் 2 பேர் இறந்தார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை. அந்த அம்மையார் 3 அல்லது 4 மணிக்கு வந்து பேசும் பொதுக்கூட்டத்திற்கு காலை 9 மணிக்கே ஆடுமாடுகளை அழைத்து வருவது போல மக்களை கொண்டு வந்து அங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள்.
வானிலை மையம் கூட, இந்த தேதிகளில், இந்த நேரத்தில் வெயில் கடுமையாக இருக்கும் எனவே குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் ஜெயலலிதா கூட்டத்தில் பேச வருகிறார். எனவே அதற்காக மக்களை கொண்டு வந்து அடைத்து வைக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியாமல் அவர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்படியும் பாதி இடம் காலியாக இருந்ததால் காலை 9 மணி முதல் உட்கார்ந்து இருப்பவர்கள் தண்ணீர் குடிக்க வெளியே செல்ல முயன்று இருக்கிறார்கள். ஆனால் காவல்துறை அவர்களை தடுத்து யாரும் வெளியே செல்லக்கூடாது என்று அடித்து உட்கார வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் இருக்கும் கூட்டமும் சென்று விட்டால் அந்த அம்மையார் யாரை பார்த்து பேசுவது, வெறும் மைதானத்தைப் பார்த்துதான் பேச வேண்டியிருக்கும். அதனால் அங்கேயே உட்கார வைத்துள்ளார்கள். இதே காரணத்தால் தான் விருத்தாசலத்தில் 2 பேர் இறந்தார்கள். அதன்பிறகாவது அந்த அம்மையாருக்கு புத்தி வந்திருக்க வேண்டும்.
இந்த நேரத்தில் சென்று பேசினால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து வருமே, கட்சிக்கு கெட்ட பெயர் வருமே, இதுக்கு நாம் ஆளாக வேண்டுமே என்று கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா ? கொஞ்சமாவது புத்தி, அறிவு இருக்க வேண்டாமா ? ஆனால் அதைப்பற்றி எல்லாம் அவர் கவலைப்பட வில்லை. அதனால் நேற்று சேலத்தில் 2 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகம் என்பவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த கொடுமையெல்லாம் ஏன் நடக்கிறது என்றால் அந்த அம்மையார் ஹெலிகாப்டரில் வர வேண்டும் என்பதால் நடக்கிறது. காரணம் சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தில் தான் ஹெலிகாப்டர்கள் மேலே ஏறும், பறக்கும், பிறகு கீழே இறக்க முடியும். கொஞ்சம் இருட்டி விட்டாலும், சூரியன் மறைந்து விட்டால் அந்த ஹெலிகாப்டர் பறக்கவோ, இறங்கவோ முடியாது. ஆக அந்த அம்மையார் பறக்க வேண்டுமென்றாலும் நம்முடைய சூரியன் இருக்க வேண்டும். ஆக, அவர் 5 அல்லது 6 மணிக்குள் சென்னைக்கு, அவரது வீட்டுக்கு சென்று விட வேண்டும். எனவே அவர் 2 அல்லது 3 மணிக்கு வந்து பேசிவிட்டு செல்ல, காலை 9 மணிக்கே காசு கொடுத்து, உணவு கொடுத்து அழைத்துக் கொண்டு வந்து மைதானத்தில் தண்ணீர் கொடுக்காமல் அடைத்து வைத்து, வெளியே செல்ல கூட அனுமதிக்காததால் இன்றைக்கு விருத்தாசலத்தில் 2 பேரும், சேலத்தில் 2 பேரும் இறந்து விட்டார்கள்.
ஆக அப்படி இறந்து போனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேட்டி எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் சென்று இருக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது ? உடனே அங்கு இருக்கக் கூடிய ஆளும் கட்சிக்காரர்களுக்கு மேலிடத்தில் இருந்து உத்திரவு வந்து, அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று பத்திரிக்கையாளர்களை அடித்து, உதைத்து, கேமராக்களை பிடுங்கி இருக்கிறார்கள். இதுதான் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகமா என்று நான் கேட்க விரும்புகிறேன்.
தமிழகம் ”அமைதி பூங்கா” -வாக இருக்கிறது என்று ஜெயலலிதா பேசிய 24 மணி நேரத்திற்குள் அவரது ஆட்சியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. ஜெயலலிதா பேரவையின் செயலாளரே பத்திரிக்கையாளர்களை தாக்கி இருப்பது மிக மிக கண்டிக்கத்தக்கது. திமுகவின் சார்பிலும்,  தலைவர் கலைஞரின் சார்பிலும் நான் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு பேசினார்.